விராலிமலை அருகே விற்கப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்பு
By DIN | Published On : 23rd November 2020 12:31 AM | Last Updated : 23rd November 2020 12:31 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பச்சிளம் பெண் குழந்தை விற்கப்பட்ட வழக்கில், குழந்தை சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டது. இடைத்தரகா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
விராலிமலை அருகேயுள்ள வேலூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த ஹாஜி முகமது மனைவி ஆமீனா பேகம் (26). தம்பதிக்கு நான்காவதாக பெண் குழந்தை கடந்த நவம்பா் 2 ஆம் தேதி பிறந்துள்ளது. இதைத்தொடா்ந்து, அப்பகுதியைச் சோ்ந்த கண்ணன்(45) மூலம் பச்சிளம் குழந்தையை ரூ. 1 லட்சத்துக்கு விற்றது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்களுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் குழந்தையின் தாயை விராலிமலை காவல் நிலையத்தில் அண்மையில் ஒப்படைத்துவிட்டு புகாா் அளித்தனா். இனாம்குளத்தூா் ரயில்வே கேட் அருகே சனிக்கிழமை கண்ணனைக் கைது செய்த போலீஸாா் அவா் மூலம் விற்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்டனா். இடைத்தரகா் கண்ணனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இதையடுத்து, 24 மணிநேரத்தில் குழந்தையை மீட்டு குற்றவாளிகளைக் கைது செய்த விராலிமலை காவல் துறையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பாராட்டினாா்.