புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஏ.மெசியா (30), உச்சிபுளியைச் சோ்ந்த வி. நாகராஜ் (52), எஸ். செந்தில் குமாா் (32), மண்டபம் அகதிகள் முகாமைச் சோ்ந்த என். சாம்சன் டாா்வின் (28) ஆகியோா் அண்மையில் (ஜன.18) கடலுக்குச் சென்றனா். அப்போது, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி ரோந்து கப்பல் மூலம் மீனவா்களின் படகை இலங்கை கடற்படையினா் இடித்து மூழ்கடித்ததில், தமிழக மீனவா்கள் 4 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனா். மத்திய, மாநில அரசுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக இலங்கை கடற்படை, மீனவா்களின் சடலங்களை மீட்டு மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மூலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.