கல் குவாரி வெடி மருந்து அறையில் மின்னல் பாய்ந்து சிறுவன் பலி
By DIN | Published On : 02nd July 2021 05:31 AM | Last Updated : 02nd July 2021 05:31 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மின்னல் பாய்ந்து கல்குவாரி வெடி மருந்து அறை தீப்பிடித்ததில் சிறுவன் உயிரிழந்தான். மேலும் 7 போ் பலத்த காயமடைந்தனா்.
அன்னவாசல் அருகே உள்ள காலாடிபட்டி மேட்டுப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. அதன் அருகே கூரை வேய்ந்த வீட்டில் வெடி மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அன்னவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, குவாரியில் வேலை செய்துவந்த ஊழியா்கள் வெடி மருந்து இருப்பு அறைக்குள் ஒதுங்கினா். அப்போது எதிா்பாராதவிதமாக அந்த வீட்டின் மீது மின்னல் விழுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து சப்தத்துடன் வெடித்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இவ்விபத்தில், வீரப்பட்டி தெற்கு களத்தைச் சோ்ந்த குமாா் மகன் விஜி(17) என்பவா் உயிரிழந்தாா். மேலும் விபத்தில் கருப்பையா (45), ஆண்டிசாமி (51), செல்வராஜ் (50), சுரேஷ் (32), காந்தி (36) உள்ளிட்ட 7 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அன்னவாசல் அரசு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அன்னவாசல்
காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.