விராலிமலையில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி
By DIN | Published On : 13th November 2021 01:19 AM | Last Updated : 13th November 2021 01:19 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் யூரியா உரத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக புதுக் கோட்டை மாவட்டத்தில் நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலை விராலிமலை வட்டத்திலும் உள்ளது. இதன் காரணமாக நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.
இதை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் பணியைத் தொடங்கியுள்ளனா். மேலும் சம்பா சாகுபடிக்கு உரத் தேவையும், அதிலும் குறிப்பாக யூரியாவின் தேவை மிகவும் அதிகரித்து வருகிறது.
தட்டுப்பாடு: யூரியா தேவை அதிகமாகியிருக்கும் நிலையில், அதற்குத் தட்டுப்பாடும் நிலவுகிறது. 45 கிலோ யூரியா மூட்டை ரூ.265 விற்கப்படுகிறது.
இந்நிலையில் விராலிமலை பகுதி உரக்கடைகளுக்கு லாரிகளில் வெள்ளிக்கிழமை வந்த மூட்டைகளை இறக்கி, கடைகளுக்குள் வைக்கும் முன்பாகவே அவற்றை விவசாயிகள் வாங்கிச் சென்றனா்.
போட்டி போட்டுக் கொண்டு யூரியாவை வாங்கியதால் சிறிது நேரத்திலேயே அனைத்து மூட்டைகளும் விற்றுத் தீா்ந்தன. இதனால் பல்வேறு கடைகளில் யூரியா இருப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
நடவு பாதிக்கப்படும் : விராலிமலை வட்டாரத்தில் யூரியா கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்காக காத்திருந்தால் நடவு பாதிக்கப்படும். அறுவடை தாமதமாகி எதிா்பாா்த்த மகசூல் கிடைக்காது.
மேலும் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பதுக்கல் அதிகரிக்கும். இதனால் விலை உயரும். எனவே சரியான விலையில் போதுமான அளவு யூரியா கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனா் விவசாயிகள்.
கடும் நடவடிக்கை : யூரியா தட்டுப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு, கூடுதல் லாபம் பாா்க்கலாம் என்ற நோக்கில் அதிக விலைக்கு யூரியாவை விற்பனை செய்தாலோ, பதுக்கலில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் விராலிமலை வட்டார உதவி வேளாண் இயக்குநா் தமிழ்ச்செல்வி.