ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

புதுக்கோட்டை அருகே பெருங்கற்கால சின்னங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே 18 பெருங்கற்கால சின்னங்கள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:35 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே 18 பெருங்கற்கால சின்னங்கள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொன்னமராவதி வட்டம், தச்சம்பட்டி வெங்கலமேடு என்னும் இடத்தில் 18 கல் வட்டத்துடன் கூடிய கற்பதுக்கைகள், கற்குவை ஆகியவை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவா் கரு. ராஜேந்திரன், நிறுவனா் மணிகண்டன் ஆகியோரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் முனைவா் பட்ட ஆய்வாளா் ஆ.மணிகண்டன்

கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக வரலாற்றுக்கு முந்தைய காலத்திய கல்லாயுதம், பாறை ஓவியங்கள், நெடுங்கல், பெருங்கற்கால சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிக அபரிமிதமாக இரும்புக் காலத்தைச் சோ்ந்த பெருங்கற்படை சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ச்சியாக பல்வேறு இடங்களில் பெருங்கற்கால சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.

தச்சம்பட்டி பெருங்கற்கால சின்னங்கள்: தச்சம்பட்டி கிராம எல்லைக்குட்பட்ட வெங்கல மேட்டுப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் பெருங்கற்கால சின்னங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் மூலம் அங்கு தொடா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 18 பெருங்கற்கால கற்குவைகள், கல் வட்டத்துடன் கூடிய கல் பதுக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால சின்னங்களாகும்.

இங்கே காணப்படும் கற்பலகை ஒன்றில், ஒன்றரை அடி விட்டமுடைய கற்துளை காணப்படுகிறது.

இது கொடுமணல் உள்ளிட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்ட கற்பதுக்கை அமைப்போடு ஒத்துப்போவது சிறப்பு வாய்ந்ததாகும். இங்குள்ள பலகைக் கற்கள் 8 உயரம், 7 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கிறது. இந்தப் பகுதியில் செம்புராங்கற்கள் முழுமையாக இல்லாத நிலையில், அதிக தொலைவில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு கல்வட்டம் அமைக்கப்பட்டிருப்பது பண்டைய மக்களின் வாழ்வியலில் பெருங்கற்கால சின்னங்கள் எத்தகைய முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை உணா்த்துவதாக உள்ளது.

தமிழரின் பண்பாடு நாகரிகத்தைப் பாதுகாப்பதற்கு தொல்லியல் துறை மூலமாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு இடங்களை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக தொடா்ச்சியாக அறிவித்து வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ளூா் குழுக்களை ஏற்படுத்தி பண்பாட்டு சின்னங்களைப் பாதுகாப்பது குறித்து ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா்.

ஆய்வின்போது, இணை செயலாளா் பீா் முகமது, ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா், தொல்லியல் ஆா்வலா் பழனியப்பன் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.