விராலிமலை: மாற்றுத் திறனாளி மீது தாக்குதல்; 3 காவலர்கள் பணியிட மாற்றம்

பார்வையற்ற மாற்றுத் திறனாளியை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவத்தில் விராலிமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய 3 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பார்வையற்ற மாற்றுத் திறனாளியை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவத்தில் விராலிமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய 3 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டி பகவான்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சங்கர் (29). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் கவரப்பட்டி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கபடுவதாகவும் இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அவ்வழியே செல்லும் பெண்களுக்கு இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாகவும் உடனடியாக கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு கைப்பேசி மூலம் தகவல் அளித்துள்ளார். 

இதனையடுத்து மாவட்ட எஸ்பி அலுவலகம் விராலிமலை காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு சங்கரின் கைபேசி எண்ணை கொடுத்து நடந்த விவரத்தை கூறி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து அந்த எண்ணை தொடர்பு கொண்ட விராலிமலை காவல் நிலைய பெண் காவலர் அவரிடம் மேற்படி விபரம் குறித்து கேட்டுள்ளார். 

இதில் இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் காவலர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து அவர் இருப்பிடத்தை அறிந்துகொண்ட காவலர்களான முதல் நிலை காவலர் செந்தில் மற்றும் காவலர் பிரபு, அசோக் ஆகிய 3 பேரும் நேராக பகவான்பட்டி சென்று அங்கிருந்த சங்கரை கன்னத்தில் அறைந்து  இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வெளியில் இருந்த ஒரு மரத்தில் சாய்த்து வைத்து லத்தியால் அடித்தும் பூட்ஸ் கால்களால் உதைத்துள்ளனர். 

இதில் கை, கால் மற்றும் உடலின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே உடலில் வீக்கம் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து நிலைமையை உணர்ந்த காவல்துறையினர் அவரை வீட்டிற்கு போக சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் மெதுவாக தத்தித்தத்தி நடந்து சென்ற அவர்  ஒரு நிலைக்கு மேல் நகர முடியாமல் காவல் நிலையம் அருகில் உள்ள ஒரு பாலக்கட்டையில்  படுத்து மயங்கி உள்ளார். 

இந்த நிலையில் தன் மகனை காவலர்கள் அழைத்து சென்ற தகவலறிந்து விராலிமலை காவல் நிலையம் வந்த அவரது தாய் மாரியாயி மகன் குறித்து விசாரித்து உள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள் அவர் சென்று விட்டதாக கூறியுள்ளனர். செய்வதறியாது திகைத்த நின்ற அவரிடம் காவல்நிலையத்தில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் சங்கரை காவலர்கள் அடித்ததை கூறியதோடு நடக்கமுடியாமல் அவர், சென்ற வழியை காட்டியுள்ளார். 

அதனை தொடர்ந்து தாய் மாரியாயி அப்பகுதியில் மகன் சங்கரை தேடும் போது அங்குள்ள பாலக்கட்டையில் மயங்கிய நிலையில் சங்கர் படுத்து கிடந்துள்ளார். இதில் பதறிப்போய் அவர் அவ்வழியே சென்றவர்கள் உதவியுடன் சங்கரை தூக்கி ஆட்டோவில் வைத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது சங்கர் உடல் வீங்கி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரை காவலர்கள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com