அன்னவாசலில் மனைவியைக் கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 04th September 2023 12:42 PM | Last Updated : 04th September 2023 12:42 PM | அ+அ அ- |

கோப்புப் படம்.
அன்னவாசலில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த கணவர் பின்பு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் கழுத்து அறுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ்(34). இவரது மனைவி நித்யகாமாட்சி (24) காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு அஸ்வத் (7), நீபாஸ்ரீ(5), புவி அக்சரா(3) என ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவ்வப்போது அடித்து துன்புறுத்துவாராம்.
இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டில் இருந்த நித்திய காமாட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் நித்திய காமாட்சியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி உள்ளார். இதில் மயங்கிய அவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து அன்னவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நிகழ்விடம் வந்த காவல்துறையினர் கழுத்து அறுபட்டு கிடந்த பால்ராஜை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த நித்திய காமாட்சியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நித்திய காமாட்சியின் தாய், இளைஞன் மீது அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...