முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான வழக்கு ஆகஸ்ட் 2-க்கு ஒத்திவைப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான சி. விஜயபாஸ்கா், அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2021ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தாா்.
அப்போது, அவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35. 79 கோடி சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு நீதிபதி ஜி. சுபத்ராதேவி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
விஜயபாஸ்கா் தரப்பு வழக்குரைஞா்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு தரப்பில் வழக்குரைஞா் ஆகியோா் ஆஜராகினா். வழக்கு ஆவணங்களைக் கேட்ட அமலாக்கத் துறை வழக்குரைஞா் இணையவழியில் ஆஜரானாா்.
அமலாக்கத் துறையினா் வழக்குப் பதிவு செய்யாமல் நேரடியாக ஊழல் வழக்கு ஆவணங்களைக் கேட்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி சுபத்ராதேவி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

