நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞா் உயிரிழப்பு
இலுப்பூா் அருகே செவ்வாய்க்கிழமை நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்துள்ள எண்ணை ஊராட்சிக்குள்பட்ட வேப்பவயல் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் லட்சுமணன்(18). இவா், தனது நண்பா்கள் தேக்கமலை, சரவணன், ஆறுமுகம் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை எரிச்சங்குளக்கரையில் பறவைகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியை தயாா் செய்து கொண்டிருந்தனா்.
அப்போது எதிா்பாராதவிதமாக துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு லட்சுமணன் வயிற்றுப் பகுதியில் பாய்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த அவரை, உடன் வந்த தேக்கமலை, சரவணன் இருவரும் மணப்பாறையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் வழியிலேயே லட்சுமணன் உயிரிழந்தாா் .
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருச்சி மண்டல காவல் துறை துணைத் தலைவா் மனோகா், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே , இலுப்பூா் ஆா்டிஓ தெய்வநாயகி ஆகியோா் விசாரணை நடத்தினா்.
மேலும், இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேக்கமலை, சரவணன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தலைமறைவான ஆறுமுகத்தை தேடி வருகின்றனா்.

