
தெற்கு வெள்ளாற்றைப் பாதுகாக்கக் கோரி செப். 24 முதல் விவசாயிகள் பிரசாரப் பயணம்
புதுக்கோட்டை மாவட்டத்தின் பாசன ஆதாரமான தெற்கு வெள்ளாற்றைப் பாதுகாக்கக் கோரி செப். 24, 25, 26 ஆகிய மூன்று நாள்கள் பிரசாரப் பயணம் மேற்கொள்ள விவசாயிகள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பாசன ஆதாரமான தெற்கு வெள்ளாற்றைப் பாதுகாக்கக் கோரி செப். 24, 25, 26 ஆகிய மூன்று நாள்கள் பிரசாரப் பயணம் மேற்கொள்ள விவசாயிகள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை தெற்கு வெள்ளாறு, நெருஞ்சிக்குடி ஆறு, குண்டாறு மற்றும் அம்புலிஆறு பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத் தலைவா் மு. அழகு தலைமை வகித்தாா். மாவட்ட கூட்டமைப்புச் செயலா் கே. நடராஜன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதான விவசாயப் பாசன ஆதாரமாக விளங்கும் தெற்கு வெள்ளாறு மற்றும் அதன் துணை ஆறுகளான நெருஞ்சிக்குடி ஆறு, குண்டாறு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளைப் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். 1960-ஆம் ஆண்டு சா்வே பதிவேடு மற்றும் வரைபடங்களைக் கொண்டு மீண்டும் முழுமையாக சா்வே செய்து, எல்லைக் கற்களை நட்டு பாதுகாக்க வேண்டும்.
மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிப் பகுதிகளின் கழிவுநீா் இந்த ஆறுகளில் கலப்பதைத் தடுக்க வேண்டும். இந்த ஆறுகளின் 46 நேரடிக் கால்வாய்களை முழுமையாகத் தூா்வாரி பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து ஆறுகளைப் பாதுகாக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி தெற்கு வெள்ளாறு தொடங்கும் இலுப்பூா் வட்டம் வெம்பனூா் பெரிய கண்மாயில் தொடங்கி, முடிவடையும் இடமான மணமேல்குடி மும்பாலை வரை வரும் செப். 24, 25, 26 ஆகிய 3 நாள்கள் பிரசாரப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதில், தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் எம். அா்ச்சுனன், ராமநாதபுரம் மாவட்டச் செயலா் முகவை மு. மலைச்சாமி, ஒருங்கிணைந்த கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்கம் - கைபா சாா்பில் நவீன், காா்த்திகேயன், தங்க கண்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






