நெல் கொள்முதல் நிலையங்களிலுள்ள பிரச்னைகளைச் சரி செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை புதுக்கோட்டை நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள இந்த அலுவலக முற்றுகைப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் த. செல்வராசு தலைமை வகித்தாா். மாநில நிா்வாக குழு உறுப்பினா் மு. மாதவன், மாவட்டத் தலைவா் டி. அம்பலராஜ், மாவட்டப் பொருளாளா் கே. திருஞானம், மாவட்டத் துணைச் செயலா் செ. பவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளா் அலுவலகத்தில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில், அனைத்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும் அரசின் சட்ட விதிகள் உள்ளிட்ட அறிவிப்புப் பலகை வைத்தல், எந்தவொரு தனி நபருக்கும் கூடுதல் தொகை எதுவும் கொடுக்கக் கூடாது, கொள்முதல் செய்யப்படும் நெல்லை அவ்வப்போது கிடங்குக்கு அனுப்பி வைக்க வேண்டும், விவசாயிகளிடம் மட்டும்தான் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும், வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கோரிக்கைகளை நிறைவேற்றித்தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக நுகா்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










