தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்று வரும் தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் படையின் துணை இயக்குநர் வியாழக்கிழமை பங்கேற்றார்.
நவ. 6ஆம் தேதி தொடங்கிய இந்த முகாமில் நாடு முழுவதும் இருந்து சுமார் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். தங்களது பகுதியில் பண்பாடு, மொழி உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் பரிமாறிக் கொள்கின்றனர். மேலும், தஞ்சாவூர் பெரியகோயில், தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோயில்களுக்கு கலாசார சுற்றுலா மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் இயக்ககத் துணை இயக்குநர் விஜேஷ்குமார் கார்க் வியாழக்கிழமை பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய இளைஞர்கள் நாளைய குடிமக்களாக உள்ளனர். பல்வேறு கலாசாரங்கள் கொண்ட இந்தப் பெருமைமிகு தேசத்தை மாணவர்கள் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர். பின்னர், கலாசார நிகழ்ச்சிகள், விநாடி - வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கினார்.
விழாவில் படையின் திருச்சி அணி தளவாய் ஆர். சிவநாதன், தஞ்சாவூர் அணி தளவாய் சைகத் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.