செவிலியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும் என தமிழக அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்தச் சங்கத்தின் மாநில அவசர செயற்குழு கூட்டம் கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநிலத் தலைவர் இந்திரா செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்று பணியாளர்களை நியமிக்காமல், பொது சுகாதாரத் துறையில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி நேர சுகாதார செவிலியர்கள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். செவிலியர்களுக்கு இதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படவில்லை. 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு துணை சுகாதார நிலையத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. குறைந்தளவு பணியாளர்களைக் கொண்டு அதிக வேலை வாங்குகின்றனர். ஊராட்சி எழுத்தர் அல்லது தன்னார்வலர்கள் செய்ய வேண்டிய காப்பீட்டுத் திட்டப் பணிகளை வேலைபளுவால் அவதியுறும் எங்களிடம் வழங்குவதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. செவிலியர்களுக்கான கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையாக இல்லை. இணையதளத்தில் காலிப் பணியிடங்களை வெளியிட்டு, வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு திங்கள்கிழமை (ஏப்.30), மே 3 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.