பட்டுக்கோட்டை வட்டம், பள்ளத்தூர் பகுதிகளில் கருகும் பயிரைக் காக்க 1 மாதத்துக்கு தினமும் தொடர்ச்சியாக 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து முன்னோடி விவசாயி பள்ளத்தூர் கே.ஏ. கூத்தலிங்கம் வெளியிட்ட அறிக்கை:
பள்ளத்தூர், கார்காவயல், கோட்டாக்குடி, மருதங்காவயல், ஆண்டிவயல், கூடலிவயல், ஆண்டிக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் பருவமழை பொய்ததாலும், கல்லணைக் கால்வாய், புதுப்பட்டினம் வாய்க்கால் பகுதியில் தண்ணீர் வராததாலும் வறண்டு கிடக்கின்றன. இதனால், இப்பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
இந்நிலையில், கருகும் பயிரைக் காப்பாற்ற மேற்கண்ட கிராமங்களுக்கு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பதற்காக தினமும் தொடர்ச்சியாக 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் விநியோகிக்குமாறு மின் வாரிய அதிகாரிகளுக்கு அண்மையில் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதன்பேரில், 4 நாள்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
பிறகு, காவிரி படுகை பகுதிகளுக்கு தினமும் ஷிப்ட் முறையில் 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறி, தொடர்ச்சியாக 20 மணி நேரம் அளிக்கப்பட்டு வந்த மின்சாரத்தை மின் வாரியம் திடீரென 10 மணி நேரமாக குறைத்து விட்டது.
அதுவும் ஷிப்ட் முறையில், குறைந்த மின் அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் பல இடங்களில் நீர் இறைக்கும் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால், கதிர் வரும் தருவாயிலுள்ள பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. சொல்ல முடியாத வேதனையில் விவசாயிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
எனவே, ஆட்சியர் இப்பிரச்னையில் தலையிட்டு பள்ளத்தூர் பகுதி கிராமங்களுக்கு 1 மாதத்துக்கு தொடர்ச்சியாக தினமும் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.