கும்பகோணத்தில் வேங்கடரமண பாகவதரின் 41ஆவது ஆண்டு மகோத்ஸச இசை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து வரும் 25 ஆம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து இசை அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
கர்நாடக இசைகளை பாடி, வளர்த்த தியாகராஜ சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் வேங்கடரமண பாகவதர்.
இவர் சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையில் தங்கியிருந்து திருவையாறுக்கு சென்று தியாகராஜ சுவாமிகளுக்கு உதவி புரிந்துள்ளார்.
கர்நாடக இசை வளர வேங்கடரமண பாகவதரும் தொண்டுகள் புரிந்துள்ளதால், இந்த சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் இசை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 237 வது திருநட்சத்திர தினத்தையொட்டி கும்பகோணத்தில் 41 வது ஆண்டாக பிர்மன் கோயில் தெரு வேதநாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகோத்சவ இசைவிழா தொடங்கியது.
மாலையில் வேங்கடரமண பாகவத சுவாமிகளுக்கு விசேஷ திருமஞ்சனம், ஆராதனையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 23 ஆம் தேதி மாலை சென்னை வி. சங்கரநாராயணன் குழுவினரின் பாட்டும், 24 ஆம் தேதி மாலை திருவிடைமருதூர் ஏ. சிவகாமசுந்தரி குழுவினரின் பாட்டும் நடைபெறவுள்ளது.
25 ஆம் தேதி காலை வேங்கடரமண பாகவதர் சுவாமிகளின் வீதியுலாவும், தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து வேங்கடரமண பாகவதருக்கு இசையஞ்சலியும் செலுத்தப்பட உள்ளது.
26 ஆம் தேதி மாலை ஆஞ்சநேயர் உற்சவ பஜனையுடன் விடையாற்றி உத்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை வேங்கடரமண பாகவதர் அறக்கட்டளை செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









