சமூக நீதியை மத்திய அரசுக் குழி தோண்டி புதைக்கிறது என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூர் திலகர் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
சமூக நீதி என்பதை மத்திய அரசும், மாநில அரசும் அநீதியாக மாற்றி இருக்கிறது. எனவே, எதிர்த்து போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மோடி தலைமையிலான மத்திய அரசு சமூக நீதியைக் குழிதோண்டிபுதைக்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் காலங்காலமாக யாரெல்லாம் புறக்கணிக்கப்பட்டனரோ, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தம் அதுதான். இந்தச் சாதனைக்குக் காரணமானவர் தந்தை பெரியார் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
அந்தச் சூழ்நிலையில் சமூக, கல்வி ரீதியாக மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என அன்றைக்கே சிலர் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பொருளாதார அளவுகோல் என்பது மாறிவிடும். இன்று ஏழையாக இருப்பவர் அடுத்த ஆண்டு பணக்காரராக மாறிவிடுவார். எனவே, இந்தப் பொருளாதார அளவுகோல் அன்றைக்கே கைவிடப்பட்டது.
அப்படிப்பட்ட பொருளாதார அளவுகோலை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டைத்தான் இப்போது பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். சமூக நீதி என்ற பெயரால் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீட்டை தருவது சமூக நீதியைக் குழி தோண்டி புதைப்பதாகும். எனவே, பொருளாதார அளவுகோலை வாக்குக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் கொண்டு வரப்பட்டதே தவிர, வேறு எந்தக் காரணமும் கிடையாது என்றார் ஸ்டாலின்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி :
சமூக நீதிக்குக் காரணமாக இருக்கிற காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், அதையொட்டிய திமுக, எப்போதும் சமூக நீதியில் அக்கறையுடைய பொதுவுடைமைக் கட்சிகள் இருக்கிற அணியில் இல்லாமல், சனாதனத்தை ஆதரிக்கிற பாஜக இருக்கிற அணியில் போய் சமூக நீதி பேசுகிற பாமக சேருகிறது.
அவர்களுடைய சந்தர்ப்பவாதத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய கொள்கைகளை அவர்களே குழி தோண்டிப் புதைக்கிற ஒரு அவமானகரமான நிகழ்வை அக்கட்சியின் தலைமை செய்துள்ளது .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன் : சமூக நீதிக்காக நாம் போராடி, தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அதை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியே காரணம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் நிலைமை, நாம் போராடி பெற்ற சமூக நீதி என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன்: மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறக்கூடிய ஆட்சிகள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், அதற்குத் துணைபோகும் காரியம் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இடஒதுக்கீட்டுக் கொள்கைகளைப் பற்றி நாளெல்லாம் முழங்கியவர்கள் இப்போது அதற்கு எதிராகச் செயல்படுகின்றனர். அவர்கள் நிச்சயமாக வெற்றி பெறப் போவதில்லை. அவர்களை வீட்டுக்கு அனுப்புவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: நமக்கு முன், மிகப் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது. அது என்னவென்றால், ஒட்டுமொத்தமாக இந்தச் சமூக நீதியை அழித்தொழிக்க வேண்டிய கொள்கையுடையவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என ஒரு பக்கம் அதிமுக கூறி வேஷம் போட்டாலும் கூட, சமூக நீதியைக் குழி தோண்டி புதைக்கக் கூடியவர்களுடன் கைகோர்த்துள்ளனர். சமூக நீதிக்காக அயராமல் உழைக்க வேண்டும் என நாம் உறுதியேற்க வேண்டும் என்றார்
ஜவாஹிருல்லா .
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

தனுசு ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
