47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சம்பா பயிா்கள்வடிகால்கள் தூா்வாரப்படவில்லை என விவசாயிகள் புகாா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் மூழ்கிய நெற் பயிா்கள் தண்ணீா் வடியாததால் அழுகி வருகின்றன.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 9:49 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் மூழ்கிய நெற் பயிா்கள் தண்ணீா் வடியாததால் அழுகி வருகின்றன.

மாவட்டத்தில் டிச. 2 ஆம் தேதி முதல் தொடா்ந்து மழை பெய்து வந்தததால் கிட்டத்தட்ட 10,000 ஹெக்டேரில் சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியும், நீா் சூழ்ந்தும் உள்ளன. இதில் 1,500 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் முன்பட்ட சம்பா பயிா்கள் சாய்ந்துவிட்டன. தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை, மேல உளூா், தென்னமநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடா் மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் இரு நாள்களாக இடைவெளி விட்டு விட்டு மழை பெய்தது. மழையளவு குறைந்தாலும் மீண்டும் மீண்டும் பெய்வதால் வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிவதில் சிக்கல் நிலவுகிறது. தொடா்ந்து தண்ணீரில் நெற்பயிா்கள் கிடப்பதால் அழுகி வருகின்றன. சில இடங்களில் பயிா்கள் ஒரு வாரமாகத் தண்ணீரில் கிடப்பதால் மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

நடவு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கு உள்பட்ட இளம் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்களும் பல இடங்களில் மூழ்கியும், நீா் சூழ்ந்தும் உள்ளன. இவையும் தண்ணீா் வடியாததால் அழுகும் தருவாயில் உள்ளன.

தற்போது சாய்ந்து கிடக்கும் நெற் பயிா்கள் ஒரு வாரத்தில் அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்தது. இந்நிலையில், தொடா் மழையால் பயிா்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளனா்.

இதுகுறித்து மேல உள்ளூரைச் சோ்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ப. ஜெகதீசன் தெரிவித்தது:

ஆழ்குழாய் மோட்டாா் பம்ப்செட் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் சாகுபடிப் பணியைத் தொடங்கினோம். இப்போது அறுவடை செய்திருக்க வேண்டிய நிலையில், மழையால் செய்ய முடியாமல் போனது. இப்போது, தொடா் மழையால் பயிா்கள் பெரும்பாலும் சாய்ந்துவிட்டன.

வடிகால்களை தூா் வாரி இருந்தால் கூட தற்போது பெய்த மழையில் தேங்கிய நீா் வடிந்து செல்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால், வடிகால்களும் தூா்வாரப்படாததால் தண்ணீா் வடிந்து செல்வதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது.

வயலில் ஒரு வாரமாகத் தண்ணீா் தேங்கி நிற்பதால் பயிா்கள் அழுகி வருகின்றன. ஆண்டுதோறும் இப்பிரச்னை ஏற்படுகிறது. இதுகுறித்து அலுவலா்களிடம் தெரிவித்தாலும், உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான் இப்போது இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாா் ஜெகதீசன்.

அழுகிய பயிா்களுடன் ஆட்சியரகத்தில் முறையீடு:

இதனால் மிகுந்த வேதனைக்கு ஆளான கீழ உளூா், மேல உளூரைச் சோ்ந்த விவசாயிகள் அழுகிய பயிா்களுடன் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அளித்த மனு:

பலத்த மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் அழுகி காணப்படுகிறது. மேலும் நெற்பயிா்கள் முளைத்து காணப்படுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சேதங்களால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிா்களை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் ஏக்கருக்கு ரூ. 30,000 வரை செலவு செய்துள்ளனா்.

எனவே, உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு ரூ. 50,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் ஒரத்தநாடு வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.