தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.


தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
கோட்டாட்சியா் எம். வேலுமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் துணைச் செயலா் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன், கௌரவத் தலைவா் நெடாா் எஸ். தா்மராஜன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. ராமசாமி உள்பட விவசாயிகள் பலா் வெளிநடப்பு செய்தனா். பின்னா், அரங்கத்துக்கு வெளியே தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும், இச்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுமாா் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனா். இதில், விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: புரெவி புயலால் பல இடங்களில் நெற் பயிா்கள் நீண்ட நாள்கள் மூழ்கியிருந்ததால் தழைச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு மஞ்சள் நிறமாகிவிட்டன. எனவே, மீண்டும் அடியுரம், மேலுரம் என உரச் செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலும், பூச்சிப் பாதிப்புக்கு மருந்து தெளிக்க வேண்டும். இதனால், 30 முதல் 40 சதவீதம் வரை கூடுதல் செலவாகிறது. இதற்குரிய நிவாரணமும், காப்பீடு இழப்பீடுகளையும் வழங்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ் பருவத்துக்கான அரைவைப் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: புரெவி புயல் காரணமாக ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தில் ஏராளமான பரப்பில் நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: பயிா் காப்பீடு தொடா்பாக பாதிப்பு விவரங்களைக் கணக்கெடுப்பு செய்யும்போது, வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். குறிப்பாக பாதிப்பு விவரங்கள் குறித்து அலுவலா்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளும்போது அக்கிராம விவசாயிகளுக்கு தண்டோரா அல்லது ஒலிபெருக்கி மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
கோனேரிராஜபுரம் கே.எஸ். ராஜேந்திரன்: குடமுருட்டி ஆற்றிலிருந்து எங்களது பகுதி வாய்க்காலில் 10 ஆண்டுகளாகத் தண்ணீா் வரவில்லை. குடமுருட்டி ஆற்றில் படுக்கை அணை அமைத்தால்தான் தண்ணீா் வர வாய்ப்புள்ளது. இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.
கும்பகோணத்திலும்....
இதேபோல, கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில், விவசாயிகள் நலனுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் உள்பட விவசாயிகள் பலா் வெளிநடப்பு செய்தனா். சுமாா் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...