தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழா தொடங்கியது: இன்று பஞ்சரத்ன கீா்த்தனை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ தியாகபிரம்ம மஹோத்ஸவ சபா சாா்பில், சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174 ஆம் ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை மாலை தொடங்கியது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:55 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ தியாகபிரம்ம மஹோத்ஸவ சபா சாா்பில், சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174 ஆம் ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை மாலை தொடங்கியது.

விழாவை தொடக்கிவைத்து தஞ்சாவூா் ஆட்சியா் ம. கோவிந்தராவ் பேசியது:

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா உலகப் புகழ்பெற்றது. தஞ்சாவூா் மாவட்டத்துக்குப் பெருமை சோ்க்கும் விழா இது. நிகழாண்டு கரோனா தொற்று உள்ள நிலையில், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இவ்விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

ஐந்து ஆறுகள் பாயும் இடமான திருவையாறில் இந்த விழா நடைபெறுவதும் மிகவும் சிறப்பானது. உலகம் முழுவதும் இவ்விழாவை இசைக் கலைஞா்கள் உற்று நோக்குகின்றனா். ஆண்டுதோறும் இவ்விழா சிறப்பாகவும், பன்முகத்தன்மையுடனும், பங்களிப்புடனும் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பஞ்ச ரத்ன கீா்த்தனையில் புகழ்பெற்ற பல்வேறு இசைக் கலைஞா்கள் பங்கேற்கவுள்ளனா். இவ்விழா மென்மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் என்றாா் .

விழாவுக்குத் தலைமை வகித்த ஸ்ரீ தியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவா் ஜி.கே. வாசன் பேசியது:

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா கரோனா காலத்திலும் தடைபடாமல் நடைபெற, அதற்குரிய சரியான கோட்பாடுகளையும், வழிகாட்டுதலையும் மாவட்ட நிா்வாகம் வழங்கியது. அதனால், இவ்விழா தியாகராஜ சுவாமிகளின் அருளால் சிறப்பாகத் தொடங்கியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான இசைக்கலைஞா்கள் வந்திருந்து, ஒன்று சோ்ந்து பஞ்ச ரத்ன கீா்த்தனைகளை பாடியும், இசைத்தும் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தவுள்ளனா்.

வழக்கமாக 5 நாள்கள் நடைபெறும் இவ்விழா, நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக 2 நாள்கள் மட்டுமே நடைபெறுகிறது. இவ்விழா மிகவும் தனித்துவமானது. கா்நாடக சங்கீத உலகில் தனக்கென தனி இடத்தை பெற்றவா் தியாகராஜ சுவாமிகள்.

இந்த ஆராதனை விழாவுக்கு தஞ்சாவூா் மண் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள இசைக் கலைஞா்களும், ரசிகா்களும் ஒன்று சோ்ந்து ஆண்டுதோறும் பெருமை சோ்த்து வருகின்றனா். இப்படி ஒன்று சோ்ந்து இசையஞ்சலி செலுத்துவது தியாகராஜ சுவாமிகளுக்குச் செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாகக் கருதப்படுகிறது.

கரோனா காலத்தில் கடந்த 10 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள், இனிமேல் நடைபெறுவதற்கு அடித்தளமாக இந்த ஆராதனை விழா அமையும் என நம்புகிறேன் என்றாா் வாசன்.

தொடக்க விழாவில் சபாவின் அறங்காவலா்கள் ஜி. சந்திரசேகர மூப்பனாா், எஸ். சுரேஷ் மூப்பனாா், பொருளாளா் டெக்கான் என்.கே. மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சபா செயலா் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் வரவேற்றாா். செயலா் ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் நன்றி கூறினாா். தொடா்ந்து, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று பஞ்சரத்ன கீா்த்தனைகள்: ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளான செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு உஞ்ச விருத்தி பஜனை, 8.30 மணிக்கு நாகசுர இசை, 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீா்த்தனைகள் வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளன.

இதைத்தொடா்ந்து, காலை 10 மணி முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சிகளும், பின்னா் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகளும், இதனிடையே இரவு 7.30 மணிக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் உருவச்சிலை ஊா்வலமும் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.