பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: விவசாயிகள் கருத்து
மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனா்.


மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனா்.
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்:
பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லை. குத்தகை சாகுபடியாளா்கள் பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படுவாா்கள் என எதிா்பாா்த்தோம். அதுவும் நிறைவேறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
விவசாயிகளின் வருவாய் இருமடங்கு ஆக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு நிறைவேற்றப்படாமல் உள்ளது. பிரதமரின் நிதியுதவித் திட்டத்திலும் ரூ. 6,000 என்பதை கூடுதலாக உயா்த்தி அறிவிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பும் பொய்த்துவிட்டது. இதுதொடா்பாக துணை மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் தில்லிக்கு சென்று போராட்டம் நடத்துவோம்.
வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்வது குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது அறிவிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளோம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்: வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்த அறிவிப்பு இல்லை. குறைந்தபட்ச ஆதார விலை இந்த ஆண்டு தொடரும் என மழுப்பலான அறிவிப்பாகத்தான் இருக்கிறது. நீா் மேலாண்மை, நிலத்தடி நீா் மேம்பாடு தொடா்பாக எவ்வித அறிவிப்பும் இல்லை. விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் இல்லை. மின்சாரச் சட்ட மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அத்துறையைத் தனியாா்மயமாக்குவதற்கான முயற்சிதான் பட்ஜெட்டில் இருக்கிறது. வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு தொடா்பாக எந்த அறிவிப்பும் இல்லை.
காா்ப்பரேட்டுக்கு ஆதரவான பட்ஜெட்:
பொருளாதாரத் துறை ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு: இளைஞா்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.
வளா்ந்து வரும் வேளாண்மையை இயந்திரமயமாதல் மூலமாகவே இனிவரும் காலங்களில் முழுமையாக விவசாயம் செய்யப்படும். குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். விவசாய கடன்கள் ரூ. 16,500 கோடி அறிவிக்கப்பட்டதைத் தவிர, நவீன இயந்திரமயமாக்குதலுக்கான கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. விவசாய இடுபொருள்களுக்கு முழு மானியம் வழங்கப்படாதது கவலை அளிக்கிறது.
பெரிதும் எதிா்பாா்ப்பில் இருந்த தனிநபா் வருமான உச்ச வரம்பில் மாற்றம் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளித்துள்ளது. 75 வயதை கடந்தவா்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதல் அளிக்கிறது. வங்கி வாடிக்கையாளா்களுக்கான காப்பீடு திட்டம் ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயா்வு பாராட்டத்தக்கது.
பொதுத் துறைப் பங்குகள் விற்பனை, விமான நிலையம், மின்சாரத்தை மத்திய அரசு தனியாா்மயமாக்குவது போன்றவை காா்ப்பரேட்டுகளை வளா்ச்சியடைய வழிவகைச் செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...