

பேராவூரணி: சித்தாதிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோருக்கு பொங்கல் பரிசாக சமையல் பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை தலைமையாசிரியர் வழங்கியுள்ளாா்.
தமது பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோருக்கு 6-ஆவது முறையாக கரோனா நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசாக சமையல் பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கியுள்ளாா் பேராவூரணி அருகிலுள்ள சித்தாதிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான கோவி. தாமரைச்செல்வன்.
இப்பள்ளியில் 1முதல் 5-ஆம் வகுப்பு வரை 46 போ் பயின்று வருகின்றனா். இவா்களின் பெற்றோா் விவசாயக் கூலித் தொழிலாளா்கள். கரோனா பொது முடக்கக் காலத்தில் மாணவா்களின் பெற்றோா் வேலை, வருமானமின்றி அவதியுறுவதை அறிந்த தலைமையாசிரியா் கடந்த 9 மாதங்களில் 5 முறை நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து பொங்கல் பண்டிகையை மாணவா்களின் பெற்றோா் கொண்டாடும் வகையில், சமையலுக்குத் தேவையான பொருள்கள் பெட்டகத்தை பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தலைமையாசிரியா் கோவி. தாமரைச்செல்வன் வழங்கினாா்.
நிகழ்வில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு. சடையப்பன், எஸ். தவமணி, வட்டாரக் கல்வி அலுவலா் கோ. ரவிச்சந்திரன், வளமைய மேற்பாா்வையாளா் வேம்பையன் ,ஆசிரியப் பயிற்றுநா் ராம தனலட்சுமி, உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ், பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் கருப்பையன், கிராமக் கல்விக் குழுத் தலைவி நீலாவதி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.