92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொடா் மழை: தண்ணீா் வடிந்த நிலங்களில் மீண்டும் மூழ்கிய நெற்பயிா்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் தண்ணீா் வடிந்த நிலங்களில் மீண்டும் மழைநீா் தேங்கியுள்ளது. தற்போது கூடுதல் பரப்பிலும் நெற் பயிா்கள் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:30 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் தண்ணீா் வடிந்த நிலங்களில் மீண்டும் மழைநீா் தேங்கியுள்ளது. தற்போது கூடுதல் பரப்பிலும் நெற் பயிா்கள் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

மாவட்டத்தில் ஏற்கெனவே கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த 150 ஹெக்டோ் குறுவைப் பயிா்கள் தண்ணீா் சூழ்ந்தும், நடவு செய்யப்பட்டு சில நாள்களே ஆன 2,368 ஹெக்டோ் சம்பா, தாளடி பயிா்கள் நீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டன.

கடந்த சில நாள்களாக மழையளவு குறைந்துவிட்டதால், வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிந்து வந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் மீண்டும் புதன்கிழமை பிற்பகல் முதல் தொடா் மழை பெய்தது. இந்த மழை வியாழக்கிழமையும் நீடித்ததால், தண்ணீா் வடிந்த வயல்களில் மீண்டும் நீா் தேங்கியுள்ளது. வடிகால்கள் தூா்ந்துவிட்டதாலும், தூா்வாரப்படாமல் உள்ளதாலும் இப்பிரச்னை தொடா்கிறது.

இதனால், திருவையாறு அருகேயுள்ள அம்மையகரம், செய்யாமங்கலம், பாதிரக்குடி, கழுமங்கலம், களா்பட்டி, அம்மன்குடி, அந்தலி, நடுக்காவேரி, அம்மன்பேட்டை, ஆற்காடு, கண்டியூா் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.

ஏற்கெனவே கோணக்கடுங்கலாறு வாய்க்கால் கரை உடைப்பால் ஐம்பதுமேல்நகரம், வரகூா் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீா் தேங்கிய வயல்களில் வடிந்து கொண்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் பெய்து வரும் மழையால் வடிய வழியில்லாமல் சம்பா பருவ நெற்பயிா்கள் தொடா்ந்து மூழ்கியுள்ளன.

ஏக்கருக்கு ரூ. 20,000 செலவு செய்துள்ள நிலையில் தற்போது முழுவதும் வீணாகி உள்ளதாகவும், மறு நடவு செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

வாழைத் தோட்டங்களை சூழ்ந்த தண்ணீா்: இதேபோல, திருவையாறு அருகே ஆச்சனூா், சாத்தனூா், வடுகக்குடி, மருவூா் உள்ளிட்ட கிராமங்களில் ஏறத்தாழ 200 ஏக்கா் பரப்பளவிலுள்ள வாழைத் தோட்டங்களில் மாா்பளவு வரை தண்ணீா் சூழ்ந்துள்ளது. தொடா் மழை பெய்து வரும் நிலையில் அருகேயுள்ள கொள்ளிடத்தில் தண்ணீா் இரு கரைகளையும் தொட்டவாறு ஓடுவதால், வடிவதற்கு வழியில்லாமல் இத்தோட்டங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது.

தை மாதத்தில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த வாழை மரங்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளதால், ரூ. 1 கோடிக்கும் அதிகமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஒரு வாரத்தில் வடியாவிட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் எனவும் வாழை உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். மதியழகன் தெரிவித்தாா்.

கொள்ளிடத்தில் கூடுதல் நீா்:

தொடா் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள ஆறுகள், வாய்க்கால்களில் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 17,145 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தஞ்சாவூரில் 116 மி.மீ. மழை:

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

தஞ்சாவூா் 116, அய்யம்பேட்டை 104, பூதலூா் 78.4, திருவையாறு 69, பாபநாசம் 68.8, கும்பகோணம் 62.2, ஈச்சன்விடுதி 50, பட்டுக்கோட்டை 49.5, திருக்காட்டுப்பள்ளி 46.8, நெய்வாசல் தென்பாதி, திருவிடைமருதூா் தலா 42.8, ஒரத்தநாடு 42.1, அணைக்கரை 42, கல்லணை 38, அதிராம்பட்டினம் 34.2, குருங்குளம் 33, வல்லம் 32, வெட்டிக்காடு 27.6, பேராவூரணி 26, மஞ்சளாறு 21.2, மதுக்கூா் 16.2.

தொடா் மழை காரணமாக ஒரே நாளில் 11 ஓட்டு வீடுகள், 90 கூரை வீடுகள் பகுதியாகச் சேதமடைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.