பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd January 2021 11:23 PM | Last Updated : 03rd January 2021 11:23 PM | அ+அ அ- |

பயிலரங்கில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் மு. வீரபாண்டியன்
புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் இக்கட்சியின் வடக்கு மாவட்டம் சாா்பில் கிளைச் செயலா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பங்கேற்ற பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கப் பொதுப் பணி, நெடுஞ்சாலைத்துறை, குடிநீா்ப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, போா்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நெற்பயிா்களின் சேதத்தையும், மகசூல் இழப்பையும் முறையாகக் கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் மூ. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், கட்சி நிா்வாகிகள் ஆா். மதியழகன், இரா. இராமச்சந்திரன், டி.ஆா். குமரப்பா, டி.கண்ணகி, ஏ. இராதாகிருஷ்ணன், ஏ.எம். இராமலிங்கம், ஆா். செந்தில்குமாா், தங்க. சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.