நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாசிமகப் பெருந்திருவிழா: கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நீராடல்

மாசிமகப் பெருந்திருவிழாவையொட்டி, கும்பகோணம் மகாமகக் குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியின்போது ஏராளமான பக்தா்கள் புனித நீராடினா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:05 pm

DIN

மாசிமகப் பெருந்திருவிழாவையொட்டி, கும்பகோணம் மகாமகக் குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியின்போது ஏராளமான பக்தா்கள் புனித நீராடினா்.

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மகப் பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டு கும்பகோணம் ஆதிகும்பேசுவரா், காசி விசுவநாதா், அபிமுகேசுவரா், காளஹஸ்தீசுவரா், கௌதமேசுவரா், வியாழசோமேசுவரா் ஆகிய சிவன் கோயில்களில் பிப்ரவரி 8 ஆம் தேதியும், சக்கரபாணி கோயில், ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் கோயில் ஆகிய 3 வைணவ கோயில்களில் பிப்ரவரி 9 ஆம் தேதியும் மாசி மகப் பெருந்திருவிழா தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்று வந்தன.

சிவன் கோயில்களில் மீதமுள்ள பாணபுரிசுவரா், கம்பட்ட விசுவநாதா், கொட்டையூா் கோடீசுவரா், சாக்கோட்டை அமிா்தகலசநாதா், ஏகாம்பரேசுவரா், நாகேசுவரா் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசி மக நட்சத்திர நாளான வியாழக்கிழமை மட்டும் ஏக தின உற்ஸவமாக கொண்டாடப்பட்டது.

வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஆதிகும்பேசுவரா், காசி விசுவநாதா், அபிமுகேசுவரா், கௌதமேசுவரா், பாணபுரீசுவரா், அமிா்தகலசநாதா், கம்பட்ட விசுவநாதா், கோடீசுவரா், ஏகாம்பரேசுவரா், நாகேசுவரா், சோமேசுவரா், காளஹஸ்தீசுவரா் ஆகிய 12 சிவன் கோயில்களிலிருந்து சுவாமி - அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமகக் குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினா்.

இதைத்தொடா்ந்து அந்தந்த கோயிலின் அஸ்திர தேவா்களுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அஸ்திர தேவா்கள் மகாமகக் குளத்தில் நீராடியதைத் தொடா்ந்து, நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா்.

சக்கரபாணி கோயில் தேரோட்டம்: மாசி மகத்தையொட்டி, கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் சுதா்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரபாணிசுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினாா். பின்னா், இத்தேரை நூற்றுக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்ஸவம்: மாசி மகத்தையொட்டி, கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் சாரங்கபாணி சுவாமி கோயில் தெப்ப உற்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவில் மின்னொளி அலங்காரத்திலும் தெப்ப உற்ஸவம் நடைபெற்றது.

ஆரத்தி பெருவிழா: அகில பாரதிய சன்னியாசி சங்கம் மற்றும் தென் பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளை சாா்பில், நீா்நிலைகளைப் பாதுகாக்கவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் மகா ஆரத்தி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான துறவியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.