தஞ்சை தேர் விபத்துக்கான காரணம்: மின் வாரிய தலைவர் ஆய்வு
By DIN | Published On : 27th April 2022 03:05 PM | Last Updated : 27th April 2022 03:16 PM | அ+அ அ- |

விபத்துக்குள்ளான தேர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த மின் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை 3.06 மணியளவில் நடைபெற்ற அப்பர் மட தேரோட்டத்தின்போது 11 பேர் இறந்தனர். இந்த உடல்களை தமிழ்நாடு மின்சார வாரிய தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பார்வையிட்டனர். மேலும், களிமேடு கிராமத்தில் சம்பவம் நிகழ்ந்த இடத்தையும் ஆய்வு செய்தனர்.
இதில், இறந்தவர்கள் யாரும் உடல் கருகி இறக்கவில்லை என்பது தெரிய வந்தது. உயர் மின்னழுத்த பாதையால் இறந்திருந்தால் உடல் முழுவதும் கருகி இறந்திருப்பர். மேலும் தானாகவே உயர் மின்னழுத்த பாதை 0.19 விநாடிகளில் மின் துண்டிப்பு நடந்துள்ளது.
இதையும் படிக்க: தஞ்சை தேர் விபத்து: திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி
எனவே உயர் அழுத்த மின் பாதையால் இந்த விபத்து ஏற்படவில்லை என்றும், தாழ்வழுத்த மின்சாரம் மூலமே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் மின் வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
எனவே தாழ்வழுத்த மின்சாரம் தேருடன் இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மூலம் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் மின்வாரிய அலுவலர்களிடையே நிலவுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.