திருவிழாக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

வருங்காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறபோது  அரசு அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.
களிமேடு கிராமத்தில் மின் விபத்தில் இறந்த சந்தோஷின் தாயாருக்கு ஆறுதல் கூறுகிறார் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.
களிமேடு கிராமத்தில் மின் விபத்தில் இறந்த சந்தோஷின் தாயாருக்கு ஆறுதல் கூறுகிறார் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.

தஞ்சாவூர்: வருங்காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறபோது  அரசு அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் மின் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வியாழக்கிழமை ஆறுதல் கூறிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

அதிர்ச்சியான இச்சம்பவம் தமிழகத்தை ஆழமான சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதுபோன்ற சம்பவம் திருவிழாக்களில் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. எனவே, எதிர்காலத்தில் திருவிழாக்கள் நடைபெறுகிறபோது உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இதுபோன்று விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு வழங்கியிருக்கிற நிதி ரூ.5 லட்சம் என்பது போதுமானதாக இருக்காது. இச்சம்பவத்தில் குடும்பத்துக்கான மொத்த வருமானத்தையும் ஈட்டித் தருகிற தலைவர்கள் இறந்துள்ளனர். நல்ல வேலை செய்யக்கூடிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் தன்னுடைய 13 வயது மகனைப் பறிகொடுத்துள்ளார். ஏற்கெனவே அவரது கணவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.

எனவே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்குவது மட்டுமல்லாமல், அக்குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, பாதுகாப்பதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் எடுக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் அரசியல் செய்ய ஒன்றும் இல்லை. இது  யாருமே எதிர்பார்க்காத விபத்து. இத்தனை ஆண்டு காலம் நன்றாகத்தான் நடைபெற்று வந்தது. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த விபத்தில் என்ன அரசியல் இருக்கிறது? ஆட்சியாளர்கள் என்ன செய்ய முடியும்? விபத்தில் அப்பாவி மக்கள் இறந்தால், அதை அரசியலுக்குப் பயன்படுத்துவது நாகரிகமான பண்பு அல்ல. 

அக்குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பது, நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வது, அரசுக் கூடுதலான உதவிகளைச் செய்ய வற்புறுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமே தவிர, இதில் அரசியல் செய்வது நல்ல செயல் அல்ல என்றார் பாலகிருஷ்ணன்.

அப்போது, மாநிலக் குழு உறுப்பினர் கோ. நீலமேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், சிஐடியூ மாநிலச் செயலர் சி. ஜெயபால், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வி, திமுக தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் து.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com