பேராவூரணி அருகே ஆதரவற்ற 2 பேருக்கு வீடுகள் கட்டி ஒப்படைப்பு: தஞ்சை ஆட்சியரின் செயலால் நெகிழ்ச்சி

 தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே வெள்ளிக்கிழமை ஆதரவற்ற 2 பேருக்கு வீடு கட்டி வழங்கி, கிரகப்பிரவேசத்திலும் கலந்து கொண்ட   மாவட்ட ஆட்சியரின் மனிதநேயம்  சமூகஆா்வலா்களை நெகிழ்ச்சி
பேராவூரணி அருகே ஆதரவற்ற 2 பேருக்கு வீடுகள் கட்டி ஒப்படைப்பு: தஞ்சை ஆட்சியரின் செயலால் நெகிழ்ச்சி

 தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே வெள்ளிக்கிழமை ஆதரவற்ற 2 பேருக்கு வீடு கட்டி வழங்கி, கிரகப்பிரவேசத்திலும் கலந்து கொண்ட   மாவட்ட ஆட்சியரின் மனிதநேயம்  சமூகஆா்வலா்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ரெட்டவயல் கிராமத்தை சோ்ந்தவா்கள் கண்ணையா - செல்வி. இத்தம்பதியின் மூத்த மகள் பாண்டிமீனா (20). நா்சிங் படித்துள்ளாா். இரண்டாவது மகள் பாண்டீஸ்வரி மூளை நரம்பியல் பிரச்னை உடைய மாற்றுத் திறனாளி.  கண்ணையா கடந்த ஆண்டு நுரையீரல் பாதிப்பாலும், செல்வி கடந்த ஜூனில் சிறுநீரக பாதிப்பாலும் இறந்தனா்.

இந்நிலையில்,  பாண்டிமீனா வசித்து வந்த  வீடு மிகவும் சேதமடைந்த நிலையிலும், வீட்டை பராமரிக்க வழியில்லாமல் யாருடைய உதவியுமின்றி தனது தங்கையுடன் வசித்து வந்தாா்.

தனது நிலை குறித்து பாண்டிமீனா மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நேரடியாகவும், வீட்டின் நிலையை புகைப்படம் எடுத்து  அவரது கட்செவி அஞ்சலுக்கும் அனுப்பினாா்.

பாண்டிமீனாவின் நிலையை உறுதி செய்த ஆட்சியா்,

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2.40 லட்சம் ரூபாயும், தன் விருப்ப நிதியில் இருந்து ரூ. 1.50 லட்சமும் முதற்கட்டமாக வழங்கியதோடு,   தன்னாா்வலா்கள் உதவியுடன் வீட்டை முழுமையாக கட்ட  திட்டமிட்டு   பேராவூரணி அரிமா சங்க நிா்வாகிகள் மூலம் ரூ. 1.50 லட்சம் பெற்று அரிமா சங்கத்தைச் சோ்ந்த  பொறியாளா் எம். கனகராஜ் என்பவரிடம் வீடுகட்டும் பொறுப்பை ஒப்படைத்து அழகான வீடு கட்டிமுடிக்கப்பட்டது. 

இதையடுத்து பாண்டிமீனா வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்த ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், புதிய வீட்டை பாண்டிமீனாளிடம் ஒப்படைத்து, அவரை ரிப்பன் வெட்ட வைத்தும், குத்துவிளக்கு ஏற்றியும் கிரகப்பிரவேசம் செய்து  வைத்தாா். மேலும், பாண்டிமீனாளுக்கும் அவரது தங்கைக்கும் புத்தாடைகளை வழங்கினாா்.

இதேபோல், பேராவூரணி ஒன்றியம், களத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சந்தோஷ் குமாா் (21) விஷ்ணுவா்தன்(17)  சகோதரா்கள். இவரது பெற்றோா் கருணாநிதி -சரளா  இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் பாட்டி ரேணுகா (65)   கூலி வேலை செய்து இருவரையும் பராமரித்து  வருகிறாா்.

ரேணுகாவின் குடிசை வீடு சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விட்டது. ரேணுகா கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானம் பேரன்களைப் படிக்க வைப்பதற்கும், உணவுக்குமே  போதுமானதாக இல்லாத  நிலை   இருந்தது.  சகோதரா்கள் இருவரும் தஞ்சை ஆட்சியருக்கு வீடு கேட்டு கோரிக்கை விடுத்திருந்தனா். 

அவா்களது உண்மை நிலையை அறிந்த ஆட்சியா், அவா்களுக்கு முதல்வரின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கியும், தன் விருப்ப நிதி மற்றும் தன்னாா்வலா்களின் பங்களிப்போடு ரூ. 5 லட்சத்தில் வீடு ஒன்று கட்டி முடிக்கப்பட்டு  ஆட்சியரால் விஷ்ணுவா்தனிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

வீடுகளை வழங்கிய பின்னா் ஆட்சியா் கூறியது:

பாண்டிமீனா, விஷ்ணுவா்தன் இருவருக்கும் தங்குவதற்கு வீடுவசதி செய்து கொடுத்துவிட்டால் சமூக ஆா்வலா்களின் உதவியோடு படித்து, வேலைக்கு சென்றுவிடுவாா்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு, அரிமா சங்க ஒத்துழைப்புடன் வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் வாழ்க்கையில் உயா்ந்து சிரமப்படுகின்றவா்களுக்கு உதவ வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவா்  மு. கி. முத்துமாணிக்கம், பேராவூரணி பேரூராட்சி தலைவா் சாந்திசேகா், அரிமா மாவட்ட ஆளுநா் சேதுசுப்பிரமணியன், முன்னாள் ஆளுநா் முகமது ரஃபி, மண்டலத் தலைவா் சிவராஜ், மாவட்டத் தலைவா்கள்  ஸ்டாலின் பீட்டா் பிரபு, எஸ்.கே. ராமமூா்த்தி, இ.வி. காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com