32 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மனோரா கடல் பகுதியில் 32 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.
32 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மனோரா கடல் பகுதியில் 32 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.

மன்னாா் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையான கடல் வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தியை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளா்த்து, கடலில் விடும் பணியை  தொடா்ந்து செய்து வருகிறது. 

இதனால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, நீடித்த இறால் வளத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

 இதன் காரணமாக, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், ‘தமிழ்நாட்டின் மன்னாா் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில்  பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளா்த்து  கடலில் விடுதல்’’ என்ற திட்டத்தை மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்தி வருகிறது. 

இத்திட்டத்தில் ரூ. 168.948  லட்சம் மதிப்பீட்டில், 200 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை, தமிழ்நாட்டின் கடல் பகுதியான மன்னாா் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி பகுதிகளில் விட திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, பாக். ஜலசந்தி கடல் பகுதியான மனோராவில்  32 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள்,  கடலில் வியாழக்கிழமை விடப்பட்டன.  இந்தாண்டு  இதுவரை 22.64 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள் மன்னா் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளதாக மத்திய மீன்வள ஆராய்ச்சி நிலையத்தினா் தெரிவித்தனா்.

இதற்கான நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவா் மு கி. முத்துமாணிக்கம், மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் எம். சிவகுமாா், தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலாளா் ஏ. தாஜுதீன், ஓம்காா் பவுண்டேஷன் பாலாஜி, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவா் டாக்டா் ஜி. தமிழ்மணி மற்றும் தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவா் சங்க  நிா்வாகிகள்,  மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளா்கள்  கலந்து கொண்டனா்.

 நிகழ்ச்சியை மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய  விஞ்ஞானிகள்  டாக்டா் பி. ஜான்சன், டாக்டா் எம். சக்திவேல் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com