

திருவிடைமருதூர் அருகே தடுப்புச் சுவர் கட்டும் பணியின் போது கலவை எந்திரம் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தாா். அவரது உடல் பல மணி நேர தீவிர முயற்சிக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா மகாராஜபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் சண்முகம் (வயது20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர் விடுமுறை நாளில் கட்டடப் பணிகளுக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பழியஞ்சியநல்லூர் கீர்த்திமானாறு அருகில் மேல அகலங்கன் வாய்க்கால் சிமெண்ட் தடுப்புப் சுவர் கட்டும்பணியில் சண்முகம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கனரக வாகனமான கான்கிரீட் கலவை எந்திரம் கான்கிரீட் கொட்ட வரும்போது நிலை தடுமாறி தடுப்புச் சுவர் கட்டட பணி செய்து கொண்டிருந்த இடத்தில் கவிழ்ந்தது.
இதில் எந்திரத்துக்கு இடையில் சண்முகம் சிக்கிக் கொண்டு உயிரிழந்தார். இது குறித்து தகவலயறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 கிரேன்கள், ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் பல மணி நேரம் போராடி கவிழ்ந்த கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி சண்முகத்தின் உடலை மீட்டனர். சண்முகம் உடல் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.
விடுமுறை நாளில் வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவ நினைத்த கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.