தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நிகழாண்டு ஒரு கோடியை எட்டும்: அமைச்சர் ராமச்சந்திரன்

தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நிகழாண்டு ஒரு கோடியை எட்டும் என்றார் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன்.
தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை காலை ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன்.
தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை காலை ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன்.
Updated on
2 min read

தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நிகழாண்டு ஒரு கோடியை எட்டும் என்றார் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன்.

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் தங்குமிடம் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்ப்பதற்கு சுற்றுலாத் துறை மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும்.

தஞ்சாவூருக்குதான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். கடந்த 2018 - 19 ஆம் ஆண்டுகளில் 1.80 கோடி பேர் தஞ்சாவூருக்கு வந்தனர். இதே அளவில் 2019 ஆம் ஆண்டிலும் வருகை தந்தனர். அதன் பின்னர் கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. கடந்த ஆண்டு 65 லட்சம் பேர் வந்து சென்றனர். 

நிகழாண்டு கடந்த 4 மாதங்களில் 62 லட்சம் பேர் வந்துள்ளனர். எனவே நிகழாண்டு இறுதிக்குள் தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும். சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் கிடைக்கும் தொகை சாதாரண கடைகள், ஏழைகள், வழிகாட்டிகள், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொடர்புடைய தொழில் செய்து வரும் அனைவருக்கும் சென்று சேர்கிறது.

இதனால் தனி மனித வருவாய் உயர்கிறது. பூம்புகாரில் ரூ.203 கோடியிலும், பிச்சாவரத்தில் ரூ.13 கோடியிலும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய அளவில் தமிழ்நாடு எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இயற்கையாகவே கோயில்களின் எண்ணிக்கை அதிகம்.

அனைத்து கோயில்களிலும் உள்ள கலை நுணுக்கங்கள் போன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகத்திலுள்ள கோயில்களில் இருக்கும் சிற்பக்கலை போல வேறு எங்குமே பார்க்க முடியாது. மருத்துவச் சுற்றுலா தொடர்பாக ஏப்ரல் மாதத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 22 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் கிடைக்கிறது.

அடுத்த முறை இன்னும் அதிகமான நாடுகளில் இருந்து வருவர் என எதிர்பார்க்கிறோம். தஞ்சாவூரில் தீம் பார்க் அமைப்பதற்கு ஆய்வு செய்யப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில்தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ராமச்சந்திரன் என்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகப் பொது மேலாளர் பாரதிதேவி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் தஞ்சாவூர் அரண்மனை சரஸ்வதி மகால் நூலகம் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com