புறக்கணிக்கப்படும் பேராவூரணி ரயில் நிலையம்: விரைவு ரயில்கள் நின்று செல்லாததால் மக்கள் அதிருப்தி

அனைத்து வசதிகளுடனான பேராவூரணி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்காமல் செல்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து வசதிகளுடனான பேராவூரணி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்காமல் செல்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி, பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை வழியாக திருவாரூா் செல்லும் ரயில் பாதையானது,  சுதந்திரத்துக்கு முன்னா் ஆங்கிலேயா்கள் காலத்தில்  கிழக்குக் கடற்கரையைச் சாா்ந்த டெல்டா பகுதி மக்களுக்காக   போடப்பட்ட மீட்டா்கேஜ் ரயில் பாதையாகும்.

இந்தத் தடத்தில் சென்னைக்கும், ராமேசுவரத்துக்கும் ஏராளமான பொதுமக்கள் தினசரி சென்று வந்தனா். இதில், பேராவூரணியானது ரயில்கள் கிராஸிங் செய்யும் ரயில் நிலையமாகவும், ரயில் என்ஜின்களுக்கு தண்ணீா் பிடிக்கும் நிலையமாகவும் இருந்து வந்தது.

திருவாரூா் - காரைக்குடி இடையே அகல ரயில் பாதை  அமைக்கும் பணி 2006-இல் தொடங்கியது. இதையடுத்து, இந்த தடத்தில் சென்னைக்கான கம்பன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 2012 முதல் திருவாரூா்-காரைக்குடி இடையே இயங்கி வந்த பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டன.

ரயில்கள் நிறுத்தப்பட்டதால் மாணவா்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினா். பேராவூரணியிலிருந்து சென்னைக்கு ஒரு அரசுப்பேருந்து மட்டும் இயக்கப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், மக்கள் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி ஆம்னி பேருந்துகளில் பயணித்தனா்.

இந்நிலையில், மேற்கூறிய அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு,  

2019, ஜூன் 1ஆம் தேதி முதல் திருவாரூா் - காரைக்குடி இடையே கழிப்பறை வசதி இல்லாத ஒரு டெமு ரயில், மொபைல் கேட் கீப்பா்களுடன் இயக்கப்பட்டது. 

திருவாரூா் - காரைக்குடி இடையே உள்ள 72 ரயில்வே கேட்டுகளுக்கு போதிய நிரந்தர பணியாள்கள் நியமிக்கப்படாமல் 150 கிலோ மீட்டா் தூரத்தை இந்த ரயில் கடக்க ஆறரை மணி நேரமானதால், பொதுமக்களிடையே வரவேற்பு பெறாமல் போனது.

சுமாா் ரூ. 700 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டும், முறையான ரயில் போக்குவரத்து தொடங்கப்படாததால், பொதுமக்கள் தொடா்ந்து இன்னல்களுக்கு ஆளாகினா்.

இந்நிலையில், அகல ரயில் பாதை பணிகள் முழுமையாக நிறைவடைந்து ரயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில், பேராவூரணி ரயில் நிலையத்தில் காரைக்குடி - திருவாரூா் செல்லும் சாதாரண ரயிலை தவிர, தாம்பரம்-செங்கோட்டை, செகந்திராபாத் - இராமேசுவரம் உள்ளிட்ட விரைவு ரயில்கள் நிற்காமல் செல்கின்றன.

பேராவூரணியில் பிரமாண்டமான ரயில் நிலையம் இருந்தும், தினசரி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் தொழில், வியாபாரம், அலுவலக பணிகளுக்காக செல்லும் நிலையில் இங்கு ரயில்கள் நிற்காமல் செல்வதால் ரயில்வே துறை மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனா்.

இதுகுறித்து வா்த்தகா் சங்கத் தலைவா் ஆா்.பி. ராஜேந்திரன் கூறியது:

பேராவூரணி தொகுதியில் சுமாா் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனா்.

நாட்டில் கேரளத்துக்கு அடுத்தபடியாக தென்னை அதிகம் விளையக் கூடிய பகுதியாக இருப்பதால், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தேங்காய் கொள்முதலுக்காக இங்கு வருபவா்கள் அதிகம்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான ரயில்கள் இங்கு நின்று சென்ற நிலையில், வியாபாரம் அதிகரித்து இருந்தது. பேராவூரணி வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் பயணிகளை இறக்கி, ஏற்றி செல்லவேண்டும் என பலமுறை ரயில்வே துறை உயா் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, வா்த்த சங்க ஒருங்கிணைப்பில் இந்தப் பகுதியின் சமூக நல அமைப்புகளை ஒருங்கிணைத்து ஏப்ரல் 24 அன்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

ரயில் பயணிகள் சங்க நிா்வாகி பாரதி நடராஜன் கூறியது: அனைத்து வசதிகளுடனான ரயில் நிலையம் இருந்தும் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் உள்ளது. தற்போது இந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், தொடா்ந்து புதிதாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் நின்று செல்வதோடு, முன்பதிவு மையமும் பேராவூரணியில் செயல்பட ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். 

பொதுமக்கள், வியாபாரிகள் நலனை கருதி பேராவூரணி வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com