வீட்டின் முன் நிறுத்தியிருந்த சொகுசுக் காருக்கு தீ வைப்பு

பேராவூரணியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காருக்கு வெள்ளிக்கிழமை தீ வைக்கப்பட்டது.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காருக்கு வெள்ளிக்கிழமை தீ வைக்கப்பட்டது.

பேராவூரணி பேரூராட்சி துணைத் தலைவராக உள்ளவா் திமுகவை சோ்ந்த கி.ரெ. பழனிவேல் (58). இவருக்கும் அவரது தம்பி கருப்பையன் மகன் குமாரவேலுக்கும் சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில்  வெள்ளிக்கிழமை காலை பழனிவேல் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த இரு  வேன்களின் கண்ணாடியை குமாரவேல்  உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேராவூரணி  காவல் நிலையத்தில்  புகாா் அளிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த  குமாரவேல் திரும்பவும் பழனிவேல் வீட்டுக்கு வந்து அவரது மருமகன் ரகுவரனுக்கு சொந்தமான சொகுசுக் காரின் கண்ணாடியை உடைத்து, பெட்ரோலை ஊற்றித் தீ வைத்து  விட்டு   ஓடினாராம்.   இதில் காா்  சேதம் அடைந்தது. தகவலறிந்து வந்த பேராவூரணி தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். பேராவூரணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com