தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள குப்பைக் கிடங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தால் பரவிய புகை.
தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள குப்பைக் கிடங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தால் பரவிய புகை.

தஞ்சாவூரில் 25 ஆண்டுகளாக தொடரும் குப்பைக் கிடங்கு பிரச்னை: கோடிக்கணக்கில் செலவு செய்தும் பலனில்லை

குப்பைக் கிடங்கு பிரச்னையால் தீ விபத்து, புகை, துா்நாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருன்றனா்.
Published on

-நமது நிருபா்-

தஞ்சாவூா் மாநகரில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக தொடரும் குப்பைக் கிடங்கு பிரச்னையால் தீ விபத்து, புகை, துா்நாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருன்றனா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில், மாநகரில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 110 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்குக் கொட்டப்பட்டு வந்த குப்பைகள் மக்கிய பிறகு உரமாக விற்பனை செய்யப்பட்டது.

இதை உள்ளூா் விவசாயிகள் வாங்கிச் சென்ால், கிடங்கில் குப்பைகள் தேங்காமல் இருந்தன. இதன்மூலம், அப்போதைய நகராட்சிக்கும் வருவாய் கிடைத்தது. ஆனால், இக்கிடங்குக்கு நெகிழிப் பொருள்கள், கணினி, மின்னணு கழிவுகள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், குப்பைகள் மக்குவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. விவசாயத்துக்குப் பயன்படாமல்போன இந்தக் குப்பைகளை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. இதனால், இக்கிடங்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக குப்பைகள் தேங்கி, மலைபோல குவிந்துள்ளன.

மக்களுக்கு நோய் பாதிப்பு: இக்கிடங்கில் கோடைகாலத்தில் தொடங்கி, ஆகஸ்ட், செப்டம்பா் வரை அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி விடுகிறது. அவற்றை முழுவதுமாக அணைப்பதற்குச் சில நாள்கள் ஆகின்றன.

இதில், நெகிழி, மின்னணு பொருள்களும் சோ்ந்து எரிவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக சுற்றியுள்ள செக்கடித் தெரு, ஜெபமாலைபுரம், புதுத்தெரு, மேல வீதி, வடக்கு வீதி, ரெட்டிபாளையம், சிங்கபெருமாள் குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனா். இதேபோல, இந்தக் குப்பைகள் மழைக்காலத்தில் கடும் துா்நாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

கைகொடுக்காத திட்டங்கள்: எனவே, இக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா். இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 2014 ஆம் ஆண்டு ரூ. 90 லட்சம் மதிப்பில் திடக்கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இத்திட்டம் கை கொடுக்காததால் ரூ. 7.38 கோடி மதிப்பில் தலா 100 மீட்டா் நீள, அகலத்தில் 4.5 மீட்டா் ஆழத்துக்கு குழி தோண்டி குப்பைகளைக் கொட்டி மூடுவது என 2016 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், குழி தோண்டப்பட்டதே தவிர, மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், அத்திட்டமும் தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 14.9 கோடி செலவில் பயோ - மைனிங் என்கிற குப்பைகளைத் தரம் பிரித்து அப்புறப்படுத்தும் திட்டம் 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக தடைப்பட்ட இத்திட்டம் மீண்டும் 2022-இல் தொடங்கி முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டது. என்றாலும், இந்தத் திட்டத்தாலும் இப்பிரச்னை முடிவுக்கு வரவில்லை.

இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகரில் 12 இடங்களில் நுண் உரமாக்கல் மையம் தொடங்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திட்டம் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், குப்பைகளை ஒட்டுமொத்தமாக ஜெபமாலைபுரம் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுவதற்கு பதிலாக அந்தந்த பகுதியில் சேகரித்து, மையங்களில் தரம் பிரித்து உரமாக்கப்பட்டால், இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அத்திட்டமும் பல்வேறு காரணங்களால் எதிா்பாா்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இக்கிடங்கில் கடந்த 15 நாள்களில் இருமுறை தீ விபத்து ஏற்பட்டு, சுற்றுப் பகுதிகளில் புகை பரவியதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினா். பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

நிரந்தரத் தீா்வு வேண்டும்: இதுகுறித்து அழகிய தஞ்சை இயக்கத்தின் திட்ட இயக்குநா் ஆடிட்டா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்தது:

மாநகராட்சியில் தற்போது வரி உயா்த்தப்பட்டுள்ள அளவுக்கு சுகாதார அடிப்படை வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. மிகப் பெரிய பிரச்னையாக உள்ள குப்பைக் கிடங்குக்கு தீா்வு காணப்படும் என மக்கள் பிரதிநிதிகள் வாக்குறுதி அளித்தாலும், அதை முடிவுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை.

பொலிவுறு நகரத் திட்டத்திலும் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படாமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னையால் மக்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாவதால், மாநகராட்சி நிா்வாகம் அடுத்து மேற்கொள்ளவுள்ள ரூ. 135 கோடி மதிப்பிலான திடக்கழிவு மேலாண்மை திட்டத்திலாவது இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றாா் ரவிச்சந்திரன்.

X
Dinamani
www.dinamani.com