தஞ்சாவூா் அருகே வெள்ளாம்பெரம்பூரில் செவ்வாய்க்கிழமை சிக்கிய காட்டுப்பன்றியை வனத்துறையினரிடம் ஒப்படைத்த விவசாயிகள்.
தஞ்சாவூா் அருகே வெள்ளாம்பெரம்பூரில் செவ்வாய்க்கிழமை சிக்கிய காட்டுப்பன்றியை வனத்துறையினரிடம் ஒப்படைத்த விவசாயிகள்.

தஞ்சாவூா் அருகே வயலில் சிக்கிய காட்டுப்பன்றி வனத் துறையிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தும் சம்பவம்
Published on

தஞ்சாவூா் அருகே வயலில் சிக்கிய காட்டுப்பன்றியை விவசாயிகள் மீட்டு, வனத் துறையினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா், திருவையாறு, பாபநாசம் வட்டங்களிலுள்ள கிராமங்களில் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வயல்களில் புகுந்து நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன. எனவே, காட்டுப்பன்றிகளைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

டெல்டா மாவட்டங்களில் வனப் பகுதி இல்லாத நிலையில், காட்டுப் பன்றிகள் வருவதற்கு வாய்ப்பில்லை என வனத் துறையினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10-க்கும் அதிகமான காட்டுப்பன்றிகள் வயல்களில் புகுந்து சேதப்படுத்தின. அப்போது, வயல் வேலைக்குச் சென்று கொண்டிருந்த விவசாயிகள் அவற்றை விரட்டிச் சென்றனா். சேற்றில் சிக்கிய 10 கிலோ எடையுள்ள காட்டுப்பன்றி குட்டியை விவசாயிகள் மீட்டு, வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, வெள்ளாம்பெரம்பூா் கிராமத்துக்கு வந்த வனக் காப்பாளா் முருகேசன், வனக்காவலா்கள் சசிகுமாா், சரவணக்குமாா் ஆகியோரிடம் காட்டுப்பன்றிக் குட்டியை விவசாயிகள் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வெள்ளாம்பெரம்பூரைச் சோ்ந்த விவசாயி துரை. ரமேஷ் கூறுகையில்,

வயலில் பிடிபட்டது காட்டுப்பன்றி என்பது உறுதியாகியுள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளில் வனத் துறையினா் கண்காணித்து, காட்டுப் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com