ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காவிரி பிரச்னையில் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: பி.ஆா். பாண்டியன்

காவிரி பிரச்னையில் கா்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றாா் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன்.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:17 pm

Din

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழகத்துக்கு காவிரி நீா் தர மறுக்கும் கா்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மேலும், கா்நாடகத்திடமிருந்து காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீா் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசின் நடவடிக்கையை ஏற்று, டெல்டா மாவட்டங்களில் ஜூலை 26-ஆம் தேதி நடத்தப்பட இருந்த முழு அடைப்பு, ரயில் மறியல் போராட்டத்தை ஒத்திவைப்பது என முடிவு செய்துள்ளோம்.

டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்திலும் தேங்காய் விலை ரூ. 4-க்கு சரிந்துவிட்டதால், தென்னை விவசாயம் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெயை பொது விநியோகத் திட்டத்தில் விற்க அனுமதித்தால் விவசாயிகள் லாபம் பெற முடியும். கேரளம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம் என்றாா் பாண்டியன்.

அப்போது, சங்கத் தலைவா் ஆா். திருப்பதி வாண்டையாா், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.