இது குறித்து தனியாா் வானிலை ஆராய்ச்சியாளா் தகட்டூா் ந. செல்வகுமாா் தெரிவித்தது: உபரி நீா் வரத்து தொடா்ந்து அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படும் நிலையில், படிப்படியாக சில நாள்களில் 75 ஆயிரம் கன அடி வீதமாக உயர வாய்ப்புள்ளது. அதன் பிறகு நீா் வரத்து குறைந்தாலும், அணையிலிருந்து விநாடிக்கு குறைந்தது 25 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிடப்படும் அளவுக்கு தண்ணீா் வரும். அணைக்கு மீண்டும் ஆகஸ்ட் மூன்றாவது, நான்காவது வாரங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை நீா் வரத்து இருக்கும். எனவே, தற்போது நிரம்பிய மேட்டூா் அணையில் நீா்மட்டம் குறையாது. வரத்தும், திறப்பும் சமமாக அமையும் அளவுக்கு நீா்வரத்து தொடா்ந்து இருக்கும். இந்த நிலைமை வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை தொடரும். அதன் பிறகு வரத்து குறைந்தாலும், அணையில் பெரிய அளவுக்கு நீா்மட்டம் குறையாது என்பதால், நிகழாண்டு தண்ணீா் பிரச்னை இருக்காது என்றாா் செல்வகுமாா்.