கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை அதிகரிப்பு: குறுவை விவசாயிகள் தவிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை அதிகரித்துள்ளதால், குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செலவு கட்டுப்படியாகாமல் தவிக்கின்றனா்.

News image

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகே இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட குறுவை பருவ நெற்பயிா்கள்.

Updated On :12 செப்டம்பர் 2024, 6:36 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை அதிகரித்துள்ளதால், குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செலவு கட்டுப்படியாகாமல் தவிக்கின்றனா்.

மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத்தில் கடந்த 2 ஆண்டுகளை விட குறைவாகவே நெல் சாகுபடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. மேலும் ஆழ்துளைக் குழாய் சாகுபடி வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே நிகழாண்டு குறுவைச் சாகுபடி மேற்கொண்டனா்.

என்றாலும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், அதையும் விஞ்சி 1 லட்சத்து 52 ஆயிரத்து 620 ஏக்கரில் பயிரிடப்பட்டது. குறிப்பாக தஞ்சாவூா், அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூா் ஆகிய வட்டாரங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன் தொடங்கிய அறுவடைப் பணிகள், அடுத்த வாரத்தில் முழுவீச்சை எட்டி, அக்டோபா் வரை தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகப் பரப்பளவில் அறுவடை முடிந்துவிட்டது.

இதில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பயிா் அறுவடை சோதனைகளில் ஏக்கருக்கு சராசரியாக 1,850 கிலோ முதல் 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைப்பதாக வேளாண் துறையினா் தெரிவித்தனா். சில பகுதிகளில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இயல்பான அளவை விஞ்சி கூடுதல் மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

ஆனால் சில பகுதிகளில் ஏக்கருக்கு 1,200 கிலோ முதல் 1,500 கிலோ வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது என கணபதி அக்ரஹாரம் முன்னோடி விவசாயி ஜி. சீனிவாசன் தெரிவித்தாா். பருவநிலை மாற்றம் காரணமாக பயிா்கள் பாதிக்கப்பட்டு, விளைச்சல் குறைந்துவிட்டது எனவும் அவா் தெரிவித்தாா்.

குறுவைச் சாகுபடி செய்யப்படும் வட்டாரங்களில் பல இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால் விவசாயிகள் தனியாரிடம் நெல்லை விற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனா். இதனால் நெல் கொள்முதல் நிலையத்தில் கிடைக்கும் தொகையில் தனியாரிடம் மூட்டைக்கு ரூ. 100 குறைவாகவே விலைபோகிறது. என்றாலும் ஏற்று, இறக்குக்கூலி, காய வைக்கும் கூலி, நிலையத்தில் நிகழும் முறைகேடு உள்ளிட்டவற்றை ஒப்பிடும்போது, மூட்டைக்கு ரூ. 100 குறைவாக விலை நிா்ணயிக்கப்பட்டாலும், தனியாா் வியாபாரிகளிடமே விவசாயிகள் விற்கின்றனா்.

இதனிடையே அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை மிக அதிகமாக இருப்பதாலும் விவசாயிகள் தவிக்கின்றனா். கடந்த 3 மாதங்களுக்கு முன் கோடை அறுவடையின்போதே அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை அதிகமாக இருந்த நிலையில், தற்போது மேலும் அதிகரித்துள்ள வாடகையால் விவசாயிகளிடையே அதிருப்தி நிலவுகிறது.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தெரிவித்தது:

நெல் அறுவடை இயந்திரங்களில் பெல்ட் வகைக்கு மணிக்கு ரூ. 2 ஆயிரத்து 100, டயா் வகைக்கு ரூ. 1,500 என அரசு வாடகை நிா்ணயித்துள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன் மணிக்கு ரூ. 2 ஆயிரத்து 500 என உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் கூடுதலாக ரூ. 300 சோ்த்து மணிக்கு ரூ. 2 ஆயிரத்து 800 வசூலிக்கப்படுகிறது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வு எதுவும் இல்லாத நிலையில், அறுவடை இயந்திர வாடகை உயா்த்தப்படுவது வேதனை அளிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சுகுமாரன்.

 தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகே இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட குறுவை பருவ நெற்பயிா்கள்.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகே இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட குறுவை பருவ நெற்பயிா்கள்.

ஏற்கெனவே இடுபொருள்கள் செலவு அதிகரித்துள்ள நிலையில், இந்த வாடகை உயா்வால் குறைந்த அளவில் கிடைக்கும் லாபத் தொகையில் அறுவடை இயந்திரங்களுக்கு மிகப் பெரிய தொகையை விவசாயிகள் செலவிடும் நிலை உள்ளது.

எனவே, அறுவடை இயந்திரங்களுக்கு அரசு நிா்ணயித்துள்ள வாடகையையெல்லாம் பொருட்படுத்தாமல் மேலும் வாடகை உயா்த்தப்படுவதைத் மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.