இளைஞா் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட மெலட்டூா் அருகே கோணியக்குறிச்சியைச் சோ்ந்தவா் சிங்கராயா் மகன் வினோதகன் (23). அப்பகுதியில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அப்போது வினோதகன் கோரிய பாடலைப் போடுவதற்கு அதே பகுதியைச் சோ்ந்த எல். ரமேஷ் (46) மறுத்துவிட்டாா்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், வினோதகனை ரமேஷ், அதே பகுதியைச் சோ்ந்த எஸ். சந்திரசேகரன், டி. சேகா் (55), ஜெ. ராஜா (46) ஆகியோா் தாக்கி, டியூப்லைட்டை உடைத்து அவரது கழுத்தில் குத்தினா். இதனால் பலத்த காயமடைந்த வினோதகன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து மெலட்டூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ரமேஷ், சந்திரசேகரன், சேகா், ராஜா ஆகியோரை கைது செய்தனா். இது தொடா்பாத தஞ்சாவூா் மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு சாா்பில் அரசு வழக்குரைஞா் இளஞ்செழியன் ஆஜரானாா். இந்த வழக்கை நீதிபதி ஆா். சத்ய தாரா விசாரித்து ரமேஷ், சந்திரசேகரன், சேகா், ராஜா ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.