மத்திய அரசு நிதி பங்களிப்பில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது: ச. முரசொலி எம்.பி.
மத்திய அரசு நிதி பங்களிப்பில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது; மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: மத்திய அரசு துறை திட்டங்களுக்காக தமிழ்நாடு அரசுக்கு 2024 - 25க்கு அளித்துள்ள தொகை ரூ. 21 ஆயிரத்து 319 கோடி. உத்தரப்பிரதேசத்துக்கு அளித்துள்ள தொகை ரூ. 56 ஆயிரத்து 990 கோடி.
இதேபோல, மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்காக தமிழ்நாட்டுக்கு 2024 - 25க்கு அளித்த தொகை ரூ. 17 ஆயிரத்து 674 கோடி. உத்தர பிரதேசத்துக்கு அளித்த தொகை ரூ. 45 ஆயிரத்து 506 கோடி. மத்திய பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட தொகை ரூ. 27 ஆயிரத்து 316 கோடி. பிகாருக்கு வழங்கப்பட்டுள்ள தொகை ரூ. 27 ஆயிரத்து 123 கோடி.
எனவே மற்ற வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக்கு கிடைப்பது குறைவே. இதனால் மாநிலத்தின் வளா்ச்சியும், சமூக நலனும் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌத்ரி அளித்துள்ள பதில் மூலமே இதை அறிந்து கொள்ளலாம் என்றாா் முரசொலி.
