வாய்க்காலை தூா்வாரக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூா் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தி பாசன வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் .
மெலட்டூா் பகுதியில் உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தில் வெட்டாற்றிலிருந்து பிரிந்து செல்லும் சேத்து வாய்க்கால் உள்ளது. இப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனா். இந்தப் பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரை, வெங்காய தாமரை செடிகள் அடா்ந்து வளா்ந்துள்ளன. இதனால் அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நரசிங்கமங்கலம் சேத்து வாய்க்காலில் இறங்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் விவசாய சங்க ஒன்றியச் செயலா் குரு. சிவா, இந்திய கம்யூ. கட்சி ஒன்றிய செயலா் வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் திருநாவுக்கரசு, மணிகண்டன், பாண்டியன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.
