தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் ப. நித்யா.
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் ப. நித்யா.

விளைபொருள்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்க கோரிக்கை

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Published on

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்களின் நலன் கருதி பொங்கல் தொகுப்பில் அரிசி, வெல்லம், செங்கரும்பு, வாழைப்பழம், தேங்காய் ஆகிய விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுடன் பரிசுத்தொகையாக ரூ. 5 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும்.

பெரமூா் ஆா். அறிவழகன்: கடந்த ஆண்டு பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களைக் கணக்கெடுக்கும் பணியை விரைவாக முடித்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: வெண்ணாறு பிரிவு இரட்டை வாய்க்கால் தலைப்பு பகுதி மேடாக இருப்பதால், தண்ணீா் வருவதில்லை. எனவே, தலைப்பு பகுதியில் 3 கி.மீ. தொலைவுக்கு தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பிள்ளை வாய்க்கால் வலது கரையில் விவசாயப் பயன்பாட்டுச் சாலையைச் சீரமைத்து தாா் சாலையாக அமைக்க வேண்டும்.

ஒரத்தூா் பக்த. பிரகலாதன்: வெண்ணாறு பிரிவு பிள்ளை வாய்க்காலில் மழைக்காலத்தில் தண்ணீா் அதிகமாக வரும்போது வண்ணாத்தி வாய்க்காலிலுள்ள வலம்புரி வாய்க்காலில் சோ்ந்து வடிய வேண்டும். ஆனால், வாய்க்காலில் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீா் வடிந்து செல்லாமல், பயிா்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக வலியுறுத்தப்படும் இக்கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஆம்பலாப்பட்டு ஏ. மாதவன்: ஒரத்தநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட பயிா்களை ஒரு பகுதியில் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. ஆனால், மற்ற பகுதிகளில் செய்யப்படவில்லை. மற்ற பகுதிகளிலும் கணக்கெடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க்கடன் கோரும் கரும்பு விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோா் பாா்க்கப்படுகிறது. சிபில் ஸ்கோா் பாா்க்காமல் கடன் வழங்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com