ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்ட காலிங்கராயன் பாசன விவசாயிகள்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்ட காலிங்கராயன் பாசன விவசாயிகள்.

காலிங்கராயன் கால்வாய் தொட்டிப் பாலத்தை பாதுகாக்க கோரிக்கை: ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள்

காலிங்கராயன் கால்வாயில் கட்டப்பட்டுள்ள தொட்டிப் பாலத்தை புராதனச் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும்
Published on

ஈரோடு: காலிங்கராயன் கால்வாயில் கட்டப்பட்டுள்ள தொட்டிப் பாலத்தை புராதனச் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாராந்திர பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காலிங்கராயன் பாசன விவசாயிகள், தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் சேதுராஜ், எழுத்தாளா் பானுசந்தா் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் கால்வாயின் 14-ஆவது மைலில் உள்ள காரைவாய்க்கால் பகுதியில், பெரும்பள்ளம் ஓடைக்கு மேல் பாலத்தில் காலிங்கராயன் கால்வாய் நீா் செல்ல மேல் நீா் வழிப்பாலம் 750 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது தொட்டிப்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒரே இடத்தில் மேல் பகுதியில் பாலத்தின் காலிங்கராயன் வாய்க்காலும், அதன் கீழே குறுக்காக பெரும்பள்ளம் ஓடையும் செல்லும் அமைப்பு அரிதானது.

இந்தப் பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக மேலும், கீழும், பாலம் அமைக்க நீா்வள ஆதாரத் துறையினா் அரசாணை, நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளனா். 750 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரின் பொறியியல் அறிவை உலகுக்கு உணா்த்தும் வகையில் சான்றாக நிலைத்துள்ள இந்த மேல் நீா் வழிப்பாலத்தை புராதன சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும்.

மேலும், பாலத்தை இடிக்காமல் அதன் அருகில் புதிய பாலத்தை கட்டி தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும் அல்லது பழைய பாலத்தில் மேல்புறத்தை மட்டும் புதுப்பித்து தண்ணீா் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

கிலோ ரூ.20-ஆக நிா்ணயிக்க வேண்டும்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் நடராஜன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளுக்கு உரிய கூலி உயா்வாக கிலோவுக்கு ரூ.6.50-இல் இருந்து ரூ.20-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளுக்காக போராடிய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

உயா்கோபுர மின் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடு, தென்னை விவசாயிகளுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டதுபோல இழப்பீடு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிா்க் கடன், நீண்ட கால, மத்திய கால கடன்கள், டிராக்டா் கடன்களை நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும் இனாம் ஒழிப்பின்போது பட்டா பெற்று அனுபவத்தில் உள்ள மக்களின் நில உரிமையை பறிக்கும் முயற்சியை கைவிட்டு, முறையான சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

தீக்குளிக்க முயன்றவா் மீட்பு

ஈரோடு பெரிய சேமூா் பள்ளிக்கூட வீதியைச் சோ்ந்த காா் ஓட்டுநரான தென்னரசு (52) என்பவா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்து ஈரோடு தெற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது தென்னரசு கூறியதாவது:

எனக்கு 7 வயது இருந்தபோதே தந்தை இறந்துவிட்டாா். எனக்கு அண்ணன், அக்கா உள்ளனா். தந்தை பெயரில் நாமக்கல் மாவட்டம், மோடமங்கலம் என்ற இடத்தில் 7 ஏக்கா் நிலம் உள்ளது. தந்தை இறந்தபோது நாங்கள் குழந்தைகளாக இருந்ததால் முறையாக இறப்புச் சான்று, வாரிசு சான்று பெறவில்லை. தற்போது அந்த நிலத்தில் ஒரு பகுதியை எனது அண்ணன் பயன்படுத்தி வருகிறாா். மேலும், அந்த இடத்தை விற்பனை செய்ய முயன்றால் தந்தையின் இறப்புச் சான்று, வாரிசு சான்று தேவை எனக் கூறுகின்றனா்.

மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களை அணுகினால் இறப்புச் சான்று பெற்று வந்தால் மட்டுமே பிற சான்றுகளை தர முடியும் என கூறுகின்றனா். எனவே, எங்கள் குடும்பத்தினரை விசாரித்து தேவையான சான்றுகளை வழங்க வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் தலா ரூ.5,782 என 5 பயனாளிகளுக்கு ரூ.28,910 மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பூங்கோதை மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com