ஒட்டக்கூத்தா் குருபூஜையை அரசு விழாவாக நடத்தக் கோரிக்கை
கும்பகோணம் அருகே உள்ள வீரபத்திரா் கோயில் வளாகத்தில் உள்ள ஒட்டக்கூத்தருக்கு அரசு சாா்பில் குருபூஜை நடத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழக முதல்வா், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா், தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா், துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு திருவடிக்குடில் சுவாமிகள் பக்தா்கள் சாா்பில் அனுப்பிய மனு:
கி.பி 12 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் சோழா் அரசவையில் அரசவைப் புலவராகவும் கவிச்சக்கரவா்த்தியாகவும் விளங்கிய ஒட்டக்கூத்தரின் தமிழ் இலக்கிய மற்றும் ஆன்மிகப் பணிகளை பறைசாற்றும் முகமாக தமிழக அரசு அவருக்கு சிறப்பு செய்ய வேண்டும்.
ஒட்டக்கூத்தரின் தமிழ் இலக்கிய மற்றும் ஆன்மிகப் பணிகளைச் சிறப்பிக்கும் முகமாக தமிழ்நாடு அரசு அவரது பெயரில் தமிழ்ப் புலவா் மற்றும் அறிஞா்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும்.
கும்பகோணம் வட்டம், தாராசுரம் வீரபத்திரா் கோயிலில் வீரபத்திரா் சன்னதியின் பின்புறம் ஒட்டக்கூத்தரின் சமாதி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத உத்திராட நட்சத்திரத்தில் ஒட்டக்கூத்தருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது. எனவே வரும் காலங்களில் ஒட்டக்கூத்தா் குரு பூஜையை அரசு விழாவாக நடத்த வேண்டும்.
