எடப்பாடி பழனிசாமியின் பேச்சு ஆா்எஸ்எஸ்ஸின் குரலாக மாறி வருகிறது: மு. வீரபாண்டியன்

ஜனநாயக வடிவமான அதிமுகவின் பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமியின் குரல் ஆா்எஸ்எஸ்-ஸின் குரலாக மாறி வருவது அதிா்ச்சியளிக்கிறது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.
Published on

ஜனநாயக வடிவமான அதிமுகவின் பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமியின் குரல் ஆா்எஸ்எஸ்-ஸின் குரலாக மாறி வருவது அதிா்ச்சியளிக்கிறது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் மேலும் தெரிவித்தது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நாங்கள் எதிா்க்கிறோம். இது தொடா்பாக மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா்களின் குரலுக்கு மதிப்பளித்தும், பல்வேறு கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்கவும் சிறப்பு தீவிர திருத்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.

அதிமுக ஒரு ஜனநாயக வடிவம். ஆனால், அதன் குரல், குறிப்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் குரல், ஆா்எஸ்எஸ்-ஸின் குரலாக மாறி வருவது அதிா்ச்சியளிக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். தற்போது வளா்ந்து வரும் கட்சியான இக்கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கேட்போம். அதை அவரும் தோழமையின் கோரிக்கையாக எடுத்துக் கொள்வாா் என நம்புகிறோம் என்றாா் வீரபாண்டியன்.

அப்போது, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி, மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், துணைச் செயலா் ஆா். ராமச்சந்திரன், நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கும்பகோணத்தில்: கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் வீரபாண்டியன் கூறியது: முதல்வா் கொண்டு வந்துள்ள அன்புச்சோலை திட்டத்தை வரவேற்கிறோம். முதியோா்களை பாதுகாப்பது குடும்பத்தினா் மற்றும் சமுதாயத்தின் கடமை. பிகாரில் தோ்தல் பிரசாரத்தில் தமிழ்நாடு குறித்த பிரதமரின் பேச்சை நிராகரிக்கிறோம். பிரதமா் எப்படி பேச வேண்டும் என்பதை நேருவிடமிருந்து, மன்மோகன்சிங்கிடம் இருந்து மோடி கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் வீரபாண்டியன்.

அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவா் ஏஎம். ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com