

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் எடப்பாடி பழனிசாமியின் முதல் கையெழுத்து குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை முனிச்சாலை சந்திப்பில் அதிமுக சார்பில் 2026 பேரவைத் தேர்தல் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் சாராம்சம் அடங்கிய நோட்டீஸை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு சனிக்கிழமை வழங்கினார். பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 உதவி தொகை, அனைவருக்கும் அம்மா இல்லம், ஆண்கள், பெண்களுக்கு இலவச பேருந்து, 150 நாட்கள் வேலைத் திட்டம், இருசக்கர வாகன வாங்க பெண்களுக்கு 25,000 மானியம் உள்ளிட்டவை நோட்டீஸில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்வில் அவர் பேசுகையில் விடியல் தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது. அதிமுகவின் 10 ஆண்டுகளாக ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து செல்கிறோம். திமுக ஆட்சியில் வரி மேல் வரி விதிப்பதால் மக்களுக்கு வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சொல்வதைதான் செய்யும், செய்வதை தான் சொல்லும், இனி அதிமுக சொல்லாதையும் செய்யும். திமுக ஆட்சியில் மின் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் அதிகரித்து உள்ளன. பேன்(மின்விசிறி) போட்டால் மின் கட்டணம் அதிகரிக்கும் என மக்கள் பேனை கூட போட தயக்கம் காட்டுகிறார்கள். திமுக ஆட்சியில் புதுசு புதுசா ஊழல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது.
2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும். தமிழகத்தில் ஒரு சொட்டு மதுபானம் கூட இல்லாமல் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி முதல் கையெழுத்திடுவார். திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதிமுக 10 ஆண்டுகளில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்துள்ளது. ஆனால், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 1 மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரவில்லை எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.