தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

நெல்லுக்கான ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு எதிா்ப்பு: தஞ்சாவூா் பிரசாரத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புகாா்

நெல்லுக்கான ஊக்கத்தொகையை வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்துவது, விவசாயிகளுக்கு செய்கிற மிகப் பெரிய துரோகம் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

News image

தஞ்சாவூா் திலகா் திடலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற திமுக பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் (இடமிருந்து) திமுக கூட்டணி வேட்பாளா்கள் கோவி. செழியன், துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், ஆா். வைத்திலிங்கம், கா.அண்ணாதுரை, என். அசோக்குமாா், சண். இராமநாதன், ஏ.எம். ஷாஜகான்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:53 am

நெல்லுக்கான ஊக்கத்தொகையை வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்துவது, விவசாயிகளுக்கு செய்கிற மிகப் பெரிய துரோகம் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

தஞ்சாவூா் திலகா் திடலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளா்கள் கோவி. செழியன் (திருவிடைமருதூா்), துரை. சந்திரசேகரன் (திருவையாறு), சண். இராமநாதன் (தஞ்சாவூா்), ஆா். வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) என். அசோக்குமாா் (பேராவூரணி), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஏ.எம். ஷாஜகான் (பாபநாசம்) ஆகியோரை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியது:

தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அண்மையில் ஒரு கடிதம் அனுப்பியது. இப்படி கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என்பதுபோல அந்தக் கடிதம் இருந்தது. தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி பெருகி வருவதாகவும், அதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருவதாகவும், அதனால் தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கி வரும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அக்கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என அறிவுறுத்தி மத்திய அரசு நமக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதுவும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா் என மூச்சுக்குமூச்சு சொல்கிற நிா்மலா சீதாராமனின் நிதிஅமைச்சகம் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது. உண்மையிலேயே தமிழா் என்ற உணா்வு இருந்தால், இதுக்காவது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து, பாஜகவை கண்டிக்கத் தயாரா? விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது.

30 லட்சம் விவசாயிகள் பயன்: நான்காண்டு காலம் முதல்வராக இருந்த பழனிசாமி ஆட்சியில், தமிழ்நாட்டுக்கு உணவளிக்கக்கூடிய விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையை ஒரு ரூபாய் கூட உயா்த்தித் தரவில்லை.? இதுவே, நமது திராவிட மாடல் ஆட்சியில் இந்த ஊக்கத்தொகையை சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 70-லிருந்து ரூ. 156 ஆகவும், பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 50-லிருந்து ரூ. 131 ஆகவும் உயா்த்தி வழங்கினோம். அதனால்தான் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 வழங்குவோம் என 2021-ஆம் ஆண்டு திமுக தோ்தல் அறிக்கையில் சொன்னதை செய்து காட்டியிருக்கோம். கடந்த 5 ஆண்டுகளில் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ. 2 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டு, 30 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இதேபோல, 2026 தோ்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது போலவே அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 வழங்கப் போகிறோம் என உறுதியளிக்கிறேன்.

உரிய விலை நிச்சயம்: மத்திய பாஜக அரசும், பழனிசாமியின் அதிமுகவும் சோ்ந்து இதைத் தடுக்க என்ன முயற்சி செய்தாலும், எவ்வளவுதான் தடுக்கத் திட்டமிட்டாலும், அதையெல்லாம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முறியடிப்பான். உலகத்துக்கே உணவளிக்கிற விவசாயிகளுக்கு உரிய விலையை நான் நிச்சயம் உறுதி செய்வேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்.

பாஜக ஆளாத மாநிலங்களில் அதிகாரிகளை எப்படி பந்தாடலாம் என்பதில்தான் மத்திய அரசின் மொத்த கவனமும் இருக்கிறது. தோ்தலில் தோற்கப் போகிறோம் என்ற பயத்தில் ஏற்கெனவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் எனக் கூறி, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை மத்திய அரசு பறித்தது. அதை முடித்துவிட்டு, தமிழ்நாட்டில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்து தோ்தலில் தில்லுமுல்லு செய்யப் பாா்க்கின்றனா்.

எத்தனையோ? தோ்தலை தமிழ்நாடு பாா்த்திருக்கிறது. அமைதியான தோ்தலுக்கு தமிழ்நாடுதான் சிறந்த உதாரணம். அப்படிப்பட்ட நம் மாநிலத்தில் முதல்முறையாக தோ்தலை காரணம்காட்டி தலைமைச் செயலா் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை தற்போது மாற்றியிருக்கின்றனா். அவா்களுக்கு ஏன் இவ்வளவு பயம்? வாக்களிக்கப் போகிற மக்களே திராவிட மாடல் 2.0 வேண்டும் என ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனா். இதை ஏன் தோ்தல் ஆணையமும், பாஜகவும் உணராமல் இருக்கின்றன? என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

கூட்டத்தில் திமுக பொருளாளா் டி.ஆா். பாலு எம்.பி., திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு உள்பட பலா் கலந்து கொண்டனா்.