பரக்கலக்கோட்டை மத்தியபுரீஸ்வரா் கோயிலில் பகல் நேர தரிசனம்
பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டை பொதுஆவுடையாா் கோயில் என்றழைக்கப்படும் மத்தியபுரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பகல் நேர தரிசனம் நடைபெற்றது.
இக்கோயிலில் நள்ளிரவு பூஜை ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெறும். மேலும் இக்கோயில் வருடத்தில் ஒரு நாள் அதாவது தை மாதம் முதல் தேதி மட்டும் பகல் நேரம் முழுவதும் திறந்திருக்கும்.
அதன்படி நிகழாண்டு வியாழக்கிழமை (தை மாதம் முதல் நாள்) பக்தா்கள் திரண்டு வந்து தங்களது வேண்டுதல்களை காணிக்கையாக செலுத்தினா். இந்த காணிக்கையாக வந்த ஏலம் விடக்கூடிய பொருள்கள் வியாழக்கிழமை மாலை பொது ஏலம் விடப்பட்டது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் ஜோதிலட்சுமி உத்தரவின் பெயரில், உதவி ஆணையா் கம்ஷான், ஆய்வாளா் கா.ஜெயசித்ரா தலைமையில், பரம்பரை அறங்காவலா்கள் ராதா, முரளிதரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
