காணும் பொங்கல்: தஞ்சாவூா் பெரிய கோயிலில் குவிந்தனா் சுற்றுப் பயணிகள்
தஞ்சாவூா்/திருக்காட்டுப்பள்ளி: காணும் பொங்கலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பொங்கல் கொண்டாட்டங்களில் மூன்றாவது நாள் காணும் பொங்கல், கன்னிப் பொங்கல், உழவா் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் உறவினா்கள், நண்பா்களைக் காணுதல், பெரியோா்களிடம் ஆசி பெறுதல், சுற்றுலா செல்லுதல் போன்றவை மேற்கொள்வது வழக்கம்.
இதன்படி, தஞ்சாவூா் பெரியகோயில், அரண்மனை, தஞ்சாவூா் அருங்காட்சியகம், மனோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வழக்கமான நாள்களைவிட சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.
ஏராளமானோா் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விளையாடியும், அதே இடத்தில் உணவு அருந்தியும் கொண்டாடி மகிழ்ந்தனா். வெளியூா்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததால், பெரியகோயில், சிவகங்கை பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
கல்லணையில்..: கல்லணையில் பொங்கல் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை பூங்காவில் உள்ள ராட்டினங்களிலும், ரயில் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் விளையாடியும், தண்ணீரில் குளித்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை தோகூா் போலீஸாா் செய்திருந்தனா்.
கும்பகோணம்: இதேபோல, கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயிலிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. தங்களது உறவினா்களுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் கோயில் வளாகத்தில் திரண்டனா்.

