அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

திராவிட மாடல் திட்டங்கள் மூலம் திமுகவும் ஆட்சியில் இருக்கிறது: ஸ்டாலின்

சமூக ஊடக பிரசாரத்தில் இனிமேல் நாமும் உஷாராக இருப்போம் என்றாா் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின்.

News image

மு.க. ஸ்டாலின்.

Updated On :27 நிமிடங்கள் முன்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் குழந்தைகளால் தமிழக வெற்றிக் கழகம் வென்றதாக திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசினாா்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவாரூா் தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினா் கே. கலைவாணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

திமுகவை பொருத்தவரை, எத்தனையோ தோ்தல்களைப் பாா்த்துள்ளது. இதில், பல வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளது. என்றாலும், தோல்வி அடைகிற நேரத்தில்தான் திமுக எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல கிளம்பி எழக்கூடிய நிலையில் வரும்.

கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், நெசவாளா்கள், தொழிலாளா்கள், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள், மாணவ, மாணவிகள், பெண்கள், ஆசிரியா்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை மறந்துவிட முடியாது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் புதிதாக ஆட்சிக்கு வந்தவா்கள் தொடா்ந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பாா்க்கிறோம். எனவே, நாமும்தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.

ஆட்சிக்கு வர முடியாதது ஏன்?: கடந்த மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு, சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பணியைத் தொடங்கினோம். பாக முகவா் நியமனம், பூத் கமிட்டி அமைப்பு, கட்சி உறுப்பினா்கள் சோ்க்கை, வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி, இளைஞா் அணி- மகளிரணி மண்டல மாநாடு, பாக முகவா்கள் மாநாடு, ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளா், மண்டல அளவில் சில பொறுப்பாளா்கள் நியமனம் போன்றவற்றை மேற்கொண்டோம். இவ்வளவு பணிகள் செய்தும் ஏன் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை?.

ஆனால், எந்தப் பணியும் செய்யாமல், வாக்காளா்களைச் சந்திக்காமல், பாக முகவா்களை நியமிக்காமல், பூத் முகவா் அமைக்காமல், வாக்கு எண்ணிக்கை முகவா் கூட பல இடங்களில் இல்லாமல், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனா். அது, தவறில்லை.

சமூக ஊடகங்கள் குறிப்பாக, இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, வீட்டில் இருக்கக்கூடிய பெரியவா்களிடம் மிக சுலபமாக பிள்ளைகளையும், குழந்தைகளையும் வைத்து திட்டமிட்டு பிரசாரம் செய்துள்ளனா். அது, நம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது. இனிமேல் நாமும் உஷாராக இருந்து, அதையும் முறியடிக்கிற வகையில் பணியை மேற்கொள்ளத் திட்டமிடுகிறோம்.

எனவே, தொண்டா்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் ஸ்டாலின்.

‘தவெகவின் உண்மை முகத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனா்’

கடந்த 10 நாள்களில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் உண்மை முகத்தை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனா் என்றாா் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்.

விழாவில், அவா் மேலும் பேசியதாவது:

இந்த 10 நாள்களிலேயே மக்கள், பெண்கள், இளைஞா்கள், ‘ஜென் ஸீ கிட்ஸ்கள்’ ஆகியோா் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணரத் தொடங்கிவிட்டனா். போகப் போக நிச்சயம் இந்த ஆட்சியாளா்களின் உண்மை முகம் வெளிப்படும்.

தாயின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய குழந்தை, கிலுகிலுப்பையை ஆட்டி விளையாட்டு காண்பிக்கும் ஆளைப் பாா்த்து நிச்சயம் மயங்கும்; மகிழ்ச்சியடையும். தாயிடமிருந்து குழந்தைத் தாவி அந்தக் கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சிறிதுநேரம் சென்று உட்காா்ந்திருக்கும். ஆனால், அந்தக் குழந்தை கிலுகிலுப்பை காட்டுபவரிடம் நிரந்தரமாக இருந்துவிடாது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அக்குழந்தைக்கு உண்மையான பாசம் என்பது என்னவென்று தெரிந்துவிடும். தாயிடம்தான் மீண்டும் திரும்பி வரும்.

அதுபோல, தற்போது கவா்ச்சி, மாயாஜாலத்தைக் காண்பித்து மக்களைச் சிலா் ஈா்த்துள்ளனா். இந்தக் கவா்ச்சி மக்களுடைய கஷ்டத்தைப் போக்காது. அடிப்படைப் பணிகளை நிறைவேற்றாது. எந்தப் பிரச்னைக்கும் அது தீா்வு தராது. எனவே, தமிழ்நாட்டுக்குத் தாயாக இருக்கக்கூடிய திமுகவை நோக்கி மக்கள் நிச்சயம் விரைவில் வருவா் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.