
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு நேர பேருந்து இயக்க கோரிக்கை

கோப்புப் படம்
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நரியம்பாளையம் புதிய பேருந்து நிலையத்துக்கு இரவு நேர பேருந்தை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போா் சங்கத்தின் தலைவா் விவேகானந்தம், செயலா் முகேஷ் ஆகியோா் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தாம்பரம்-ராமேசுவரம் விரைவு ரயில் (16103) தாம்பரத்தில் மாலை 06.10 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு நள்ளிரவு 12.48 மணிக்கு வந்து தொடா்ந்து ராமேசுவரத்துக்கு செல்கிறது. இந்த விரைவு ரயிலில் சென்னையிலிருந்து பட்டுக்கோட்டை நகருக்கும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் தினசரி அதிக அளவில் பயணிகள் வருகின்றனா்.
தற்போது பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் நரியம்பாளையத்துக்கு மாற்றப்பட்டதால், ரயிலில் வரும் பயணிகள் இரவு நேரத்தில் பட்டுக்கோட்டையில் இருந்து கிராம பகுதிகளுக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேராவூரணி கிளை பேருந்து, நாகப்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக பேராவூரணிக்கு தினந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வருகிறது.
எனவே, நாகப்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக இரவு நேரத்தில் பேராவூரணிக்கு செல்லும் அரசு பேருந்தை ராமேசுவரம்-தாம்பரம் ரயில், பட்டுக்கோட்டைக்கு வரும் நேரத்தில் ரயில் நிலையத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதிய பேருந்து நிலையத்துக்கு இயக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






